பீஹாரில் சட்டசபை தேர்தல் பிரசாரம்... விறுவிறு!: பரஸ்பர குற்றச்சாட்டுகளால் தகிக்கிறது
அர்ரா: பீஹார் சட்டசபை தேர்தல் முதல் கட்ட பிரசாரம் முடிவடைய இரண்டு நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் விறுவிறு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. பல தேசியத் தலைவர்கள் பீஹாரில் களமிறங்கியுள்ள நிலையில், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும், 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. வரும் 14ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.,க்கு சாதகமாக, முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த காங்கிரஸ் சம்மதிக்கவே இல்லை. இதனால், அந்தக் கட்சியின் தலைமீது நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டி, லாலுவின் கட்சி தனக்கு தேவையானதை சாதித்துக் கொண்டது. தேர்தல் முடிந்த பின், கூட்டணிக்குள் இருக்கும் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வர். இத்தகைய மோசமான நிலை பீஹாருக்கு நல்லதல்ல. சில ஆண்டுகளுக்கு முன், இங்கு நடந்த காட்டாட்சியை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். பீஹார் மக்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தே தே.ஜ., கூட்டணி சார்பில் கடந்த வாரம் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. அது, 'இண்டி' கூட்டணி போல பொய் மூட்டைகள் அல்ல. பாகிஸ்தானில் மறைந்திருக்கும் பயங்கரவாத முகாம்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் குடும்பத்துக்கு துாக்கம் போய்விடுகிறது. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பாகிஸ்தானும், காங்கிரசும் இன்று வரை மீண்டு வரவில்லை. நம் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பதன் மூலம் வளர்ச்சியை எட்ட முடியும் என நாம் நம்புகிறோம். ஆனால், காங்கிரஸ், ஆர்.ஜே.டி., போன்ற கட்சிகள், நம் பாரம்பரியத்தை இழிவாக பார்க்கின்றன. உ.பி.,யின் பிரயாக்ரா ஜில் நடந்த மஹா கும்ப மேளாவை பற்றி கடுமையாக விமர்சித்தன. சமீபத்தில் கூட சத் பண்டிகையை காங்கிரஸ் கேலியாக பேசியது. எனவே, இந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.