புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று மோடி குறிப்பிட்டார்.ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக அத்வானிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது. நடவடிக்கைகள் ஏராளம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பாரதிய ஜனதாவின் முன்னெடுப்பில் அத்வானியின் பங்கு முதன்மையானது. கடந்த 1990ல் அவர் மேற்கொண்ட ராமர் ரத யாத்திரையே, ராமர் கோவில் இயக்கம் வலுப்பெற முக்கிய காரணமாக அமைந்தது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட சீனியர் தலைவர்களுடன் இணைந்து, பா.ஜ.,வை உருவாக்கியதிலும் அத்வானியின் பங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் கட்சியை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம். கட்சியின் நீண்ட கால தலைவர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.உடல்நிலை மற்றும் மூப்பு (96 வயது) காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். சமீபத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது, அதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக, சமூக வலைதளத்தில் மோடி அறிவித்தார். அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியானது. பங்களிப்பு அளப்பரியது
பிரதமர் மோடி கூறியதாவது:நம்முடைய காலத்தில் நாம் பார்த்து பிரமித்த மிகப் பெரும் அரசியல் மேதைகளில் ஒருவர் அத்வானி. நாட்டின் வளர்ச்சிக்கான அவருடைய பங்களிப்புகள் அபாரமானவை. சாதாரண அடித்தள பின்னணியில் இருந்து, நாட்டின் துணை பிரதமராக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.நீண்டகால அரசியல் வாழ்க்கையில், தன்னலமில்லா உறுதியுடன், மிகவும் வெளிப்படையாகவும், ஒருங்கிணைந்தும், அரசியலின் தரத்தை நிர்ணயித்து, அரசியல் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தியவர்.நாட்டின் கலாசார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அவருடைய பங்களிப்பு ஒப்பிட முடியாதவை. இந்த தருணம் எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்ச்சிகரமானது. அவருடன் இணைந்து, அவருடன் பேசி, அவரிடம் இருந்து கற்கும் பெரும் பாக்கியத்தை பெற்றவன் நான்.இவ்வாறு மோடி கூறினார்.அத்வானியுடன் போனில் பேசி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஒடிசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியிலும் அத்வானியின் பெருமைகள் குறித்து சிலாகித்தார்.காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. 'இப்போதாவது அத்வானிக்கு மரியாதை கொடுக்க மனம் வந்ததே' என குத்தியும் காட்டியது காங்கிரஸ்.
அத்வானி நெகிழ்ச்சி!
பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து அத்வானி கூறியுள்ளதாவது:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தொண்டனாக, 14 வயதில் இணைந்தது முதல், என் வாழ்க்கையில் எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்த நாட்டின் நலனுக்காக தன்னலமில்லாமல், அர்ப்பணிப்புடன் சேவை செய்வதையே மிகச்சிறந்த பரிசாகக் கருதி வந்தேன். இந்த வாழ்க்கை என்னுடையதல்ல; இந்த நாட்டுக்கானது. பாரத ரத்னா விருது பெற்றுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருடன் பணியாற்றியதை எனக்கு கிடைத்த கவுரவமாகக் கருதுகிறேன். என்னுடைய பொது வாழ்க்கையில், என்னுடன் பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.என்னுடைய குடும்பத்தினர், குறிப்பாக என்னுடைய பக்கபலமாகவும், ஊக்க சக்தியாகவும் இருந்த, மறைந்த என் மனைவி கமலாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு தனிநபராக எனக்கு இந்த விருது கிடைத்ததாகக் கருதவில்லை. என்னுடைய வாழ்நாளில் என்னால் முடிந்தவரை கடைப்பிடித்த கொள்கைகள், நோக்கங்களுக்காக கிடைத்ததாகக் கருதுகிறேன். இதை மனப்பூர்வமாக ஏற்கிறேன். இந்த நாடு, மேலும் பல உச்சங்களை அடைய வேண்டும் என்ற ஆசையையும், விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
.
1927 நவ., 8 கராச்சியில் (தற்போது பாக்.,) பிறந்தார். 1942 ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்ந்தார்.1942 ஹைதராபாதில் பட்டப்படிப்பு. 1944 கராச்சியில் பள்ளி ஆசிரியர்.1947 இந்தியா - பாக்., பிரிவினையின் போது டில்லிக்கு குடிபெயர்ந்தார். 1947 - 1951 ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயலர். 1951 பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். 1960 - 1967 ஜன சங்கத்தின் சார்பில் வெளியான இதழின் உதவி ஆசிரியர். 1970 ராஜ்யசபா எம்.பி.,யானார். 1970 - 1977 பாரதிய ஜன சங்க தலைவர்1977 நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1977 ஜனதா கட்சி ஆட்சியில் மத்திய அமைச்சரானார். 1980 பா.ஜ., உதயம். அதன் பொதுச்செயலரானார். 1986 - 1991 பா.ஜ., தேசிய தலைவர். 1988 மத்திய உள்துறை அமைச்சர். 1990 ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி குஜராத்தின் சோம்நாத் - உ.பி.,யின் அயோத்திக்கு ரத யாத்திரை துவக்கினார். 1993 -- 1998 பா.ஜ., தலைவர். 1999வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர்2002 -- 2004 துணை பிரதமர்1989 - -91, 2004, 2009 மே -- டிச., 21லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்2014 அரசியலில் இருந்து ஒதுங்கினார். 2024 பிப்., 3 பாரத ரத்னா விருதுக்கு தேர்வு.
'பாரத ரத்னா' சிறப்பம்சம்
இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா, 1954ல் இருந்து வழங்கப்படுகிறது. துவக்கத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொது சேவையில் சிறந்து விளங்குபவருக்கு வழங்கப்பட்டது. 1966ல் இருந்து மறைந்தவர்களும், 2011ல் பிற துறையினரும் பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.இதுவரை விருது பெற்றவர் - 50மறைவுக்குப்பின் - 15 ஓய்வூதியமாக 1.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பெறும் சம்பளத்தில் பாதி. உள்நாட்டில் ஏர் இந்தியா விமானத்தில் இலவச பயணம். விமான நிலையம், ரயில் நிலையத்தில் முன்னுரிமை. பார்லிமென்ட் கூட்டம், அமர்வுகளில் பங்கேற்கலாம். சி.ஆர்.பி.எப்., வீரர்களின் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு. சுதந்திர, குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் வாய்ப்பு. வி.ஐ.பி., வரிசையில் மத்திய அமைச்சருக்கு இணையாக ஏழாவது இடம். மறைவின் போது, அரசு மரியாதை அளிக்கப்படும். விருது பெற்றவர்கள் தங்களது பெயருக்கு முன் அல்லது பின், 'பாரத ரத்னா' என சேர்க்கக் கூடாது; பாரத ரத்னா விருது பெற்றவர் என குறிப்பிடலாம்.