உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி குறித்து சோனியா கருத்து ஒழுங்கு நடவடிக்கை கோருகிறது பா.ஜ.,

ஜனாதிபதி குறித்து சோனியா கருத்து ஒழுங்கு நடவடிக்கை கோருகிறது பா.ஜ.,

புதுடில்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவதுாறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாக காங்., - எம்.பி., சோனியா மீது பா.ஜ., உறுப்பினர்கள் பார்லி.,யில் உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜன., 31ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்லிமென்டில் உரையாற்றினார். அதன்பின், பார்லி வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்., ராஜ்யசபா எம்.பி., சோனியா, 'ஜனாதிபதி முர்மு மிகவும் களைப்பாக இருந்தார். உரையில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியில் அவரால் சரியாக உரையாற்றக்கூட முடியவில்லை. பாவம்' என்றார்.இதற்கு ஜனாதிபதி அலுவலகம் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளை சோனியா தவிர்த்திருக்கலாம். 'அது ரசிக்கும்படி இல்லை. ஜனாதிபதியின் உடல்நிலை நன்றாகவே உள்ளது' என, குறிப்பிட்டது.பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.இந்நிலையில், சோனியாவின் பேச்சுக்காக அவர் மீது உரிமைமீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பா.ஜ., - எம்.பி.,க்கள் குழு, பார்லி.,யில் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது. அதன் விபரம்:ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி ராஜ்யசபா எம்.பி., சோனியா, சமீபத்தில் தெரிவித்த இழிவான மற்றும் கீழ்த்தரமான கருத்துக்கள் குறித்து, மிகுந்த வருத்தத்துடன் இதை எழுதுகிறோம்.அவரது பேச்சு, ஜனாதிபதியின் அந்தஸ்தையும், கண்ணியத்தையும் இழிவுபடுத்தி உள்ளது. இத்தகைய கருத்துக்கள் ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமின்றி பார்லிமென்டின் புனிதத்தன்மைக்கும் களங்கம் விளைவித்துள்ளது.இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் வைத்து, சோனியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை