பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ தனியாருடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பொம்மசந்திரா - ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான, சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக, தனியார் நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது.பெங்களூரு ஆர்.வி.,ரோடு - பொம்மசந்திரா இடையில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிய வாய்ப்பு உள்ளது. தமிழகம் ஓசூரில் இருந்து, பொம்மசந்திரா 20 கிலோ மீட்டர் துாரத்தில் தான் உள்ளது. இதனால் பொம்மசந்திரா வரை இயக்கப்படும் ரயிலை, ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று, ஓசூரை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.இது தொடர்பாக தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அனுமதி கொடுத்து உள்ளது. இதையடுத்து ஓசூர் - பொம்மசந்திரா இடையில், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய, பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், தமிழக அரசின், மெட்ரோ ரயில் நிர்வாக கழகம் ஒப்பந்தம் செய்து உள்ளது.சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 29.44 லட்சம் ரூபாய், தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ஓசூர் - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டால், ஓசூரில் இருந்து பொம்மசந்திரா வரை உள்ள, தொழிற்பேட்டைகள் வளர்ச்சி அடையும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பஸ்கள் மூலம் ஓசூர் வழியாக பெங்களூருக்கு பயணியர் செல்கின்றனர்.போக்குவரத்து நெரிசலால் ஓசூர் - பெங்களூரு இடையிலான துாரத்தை கடக்க 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால், பயணியருக்கு அனுகூலமாக இருக்கும். இரு மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படும், முதல் மெட்ரோ ரயில் என்ற பெருமையும் கிடைக்கும்- நமது நிருபர் -.