உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளுக்கு ராமன் பெயர் சூட்டி மகிழ்ச்சி

குழந்தைகளுக்கு ராமன் பெயர் சூட்டி மகிழ்ச்சி

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த இதே சிறப்பு நாளில் ஏராளமான பச்சிளம் குழந்தைக்கு, நாமகரணம் நடந்தது.விஜயபுரா நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், விஜயபுராவில் பல்நோக்கு மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நேற்று வரை ஐந்து நாட்கள் பிரசவம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால் இந்த மருத்துவமனைக்கு கர்ப்பிணியர் வருகை அதிகமாக இருந்தது. 18ம் தேதி முதல் நேற்று வரை 61 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று பிறந்த 3 ஆண் குழந்தைகளுக்கு ராமர் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டன.தவிர பெங்களூரில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. சிலருக்கு சுக பிரசவம் நடந்தது. சில கர்ப்பிணிகள், இதே நாளில் குழந்தை பெற வேண்டும் என, ஆர்வம் காண்பித்து, டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்து தங்களுக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டனர்.வாணி விலாஸ் மருத்துவமனையில், 28 குழந்தைகள், மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் நான்கு, கோஷா மருத்துவமனையில் ஆறு, பல்வேறு தனியார் மருத்துவமனைகளில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேற்று பிறந்தன.

மகன், மகளுக்கு பெயர் சூட்டிய நடிகர்

கன்னட திரை உலகில் முன்னணி நடிகர் துருவ் சர்ஜா. இவரது மனைவி பிரேர்னா. இவர்கள் இருவரும் காதலித்து 2019ல் திருமணம் செய்தனர். 2022ல் பெண் குழந்தையும், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆண் குழந்தையும் பிறந்தன. குழந்தைகளுக்கு பெயர் வைக்காமல் இருந்தனர். செல்ல பெயர் வைத்து அழைத்து வந்தனர்.நேற்று துருவ்வின் அண்ணன் சீரஞ்சீவி சர்ஜாவின் நினைவிடத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சியில், பெண் குழந்தைக்கு ருத்ராக் ஷி என்றும், ஆண் குழந்தைக்கு ஹயக்ரீவா எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் அர்ஜுன் சர்ஜா, சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.குழந்தைகளுக்கு பெயர் தேர்வு குறித்து துருவ் சர்ஜா கூறுகையில், ''நானும், எனது மனைவி பிரேர்னாவும் குழந்தைகளுக்கு பெயர் தேர்வு குறித்து, நிறைய யோசித்தோம். பெயரில் சக்தி இருக்க வேண்டும் என்பது, எங்கள் எண்ணமாக இருந்தது. இதனால் மகளுக்கு ருத்ராக் ஷி என்றும், மகனுக்கு ஹயக்ரீவா என்ற பெயரை மகனுக்கும் சூட்டி உள்ளோம். ராமர் கோவில் திறப்பு அன்றே, பெயர் சூட்ட முடிவு செய்து இருந்தோம். அயோத்தியில் பூஜை நடந்த நேரத்தில், பெயர் சூட்டு விழா இங்கு நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.இதேபோல், சித்ரதுர்காவின், காந்தி நகரில் வசிக்கும் சாகர் - பாவனா தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 22ல் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கும் நேற்று 'ஸ்ரீராம்' என பெயர் சூட்டினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ