சிவில் சட்டங்களை இளம் வழக்கறிஞர்கள் படிப்பது அவசியம்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு சென்னை: ''இன்றைய பல சட்ட கருத்துக்கள் சிவில் சட்டத்தில் வேரூன்றியுள்ளன; அவற்றை இளம் வழக்கறிஞர்கள் படிப்பது முக்கியம்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பேசினார்.வால்மீகி ராமாயணம் போதிக்கும் விஷயங்களை அரசியல் சட்ட திட்டங்களுடன் ஒப்பிட்டு, மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் கூறிய கருத்துகளின் தொகுப்பு நுால் பற்றிய மதிப்புரை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இசை கல்லுாரி வளாகத்தில் நடந்தது.அத்தியாயங்கள்
நுால் மதிப்புரை நிகழ்ச்சியில், நுால் தொகுப்பு பணியில் முக்கிய பங்காற்றிய வழக்கறிஞர் அம்ரித் பார்கவ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடராமன் பேசினர்.உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடராமன் பேசியதாவது:மூத்த வழக்கறிஞர் கே.பராசரன், ராஜ்யசபா எம்.பி., இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என, முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.சட்டத்துறையில், 70 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன். சபரிமலை, ராமர் பாலம், அயோத்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் பங்கு பெற்று வாதாடியுள்ளார்.நுாலில், அதிகார வரம்பு, நியாயமான விசாரணையின் முக்கியத்துவம், முன்னோடி சட்டங்கள் என, பல்வேறு விஷயங்கள் குறித்து, ஒவ்வொரு அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டு உள்ளன.வால்மீகி ராமாயணம் எல்லா காலத்துக்கும், எல்லா சூழ்நிலைக்கும் தேவையான நுால் என்பதை அறிந்த மூத்த பிதாமகன் பராசரன்.இன்றைய இளைய தலைமுறைக்கு வாய்ப்புகள் குறைவு அல்ல; வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால், அந்த வாய்ப்புகள் உங்கள் கைகளில் இல்லை என்பதை அறிந்து, அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்.ஏனெனில், தொழில், 'கேரியர்' தேர்ந்தெடுப்பது என்பது, மிக மிக சூழ்நிலை சார்ந்தது.செயற்கை நுண்ணறிவு
நீங்கள் கடினமாக உழைத்தால், ஒரு கட்டத்தில் உங்களை வெகுமதி தேடி வரும். இதுதான் வாழ்க்கை நமக்கு கற்று தந்தது.நேர்மை, அர்ப்பணிப்பு, ஆர்வம் இருந்தால், கடவுள் முதலில் வருவார் என்ற, உங்களின் நம்பிக்கையே, உங்களுக்கான வாய்ப்புகள் என்ற கதவை திறக்கும்.செயற்கை நுண்ணறிவு திறனான ஏ.ஐ., தொழில்நுட்பம் பற்றி, இன்று பரவலாக பேசப்படுகிறது. முந்தைய காலத்தில், முன்னோடி சட்டங்கள், வழக்கு சார்ந்த ஒன்றை தேட வேண்டும் என்றால், அதற்கு பிரயத்தனப்பட வேண்டும்.இன்று அனைவராலும் பேசப்படும், ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, விரைவாக ஒன்றை குறித்த தகவல்களை பெற முடியும்.முட்டாள்தனமாக வார்த்தைகளை குறிப்பிட்டால் கூட, ஏராளமான விஷயங்களை வாரி வழங்கும்.உங்கள் செயல்முறையை துரிதப்படுத்தும் கருவி இந்த தொழில்நுட்பம். அவ்வாறு வாரி வழங்கும் தகவல்கள் உங்களுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை, நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பேசியதாவது:புவியியல், சட்டம், நீதி, தர்மம் என, அனைத்தையும் உள்ளடக்கியது ராமாயண நுால். இது குறித்து நன்கறிந்தவர் பராசரன். நுாலில் அத்தியாயங்கள் வாரியாக பல்வேறு விஷயங்கள் பற்றி தொகுக்கப்பட்டுள்ளன.இந்த நுாலை, இதிகாசம் என்றே கூறலாம்; அவ்வாறு தொகுக்கப்பட்ட நுாலை, இளைஞர்கள் படித்தறிய வேண்டும். அதையே, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் வலியுறுத்தினார்.சட்டக் கருத்துக்கள்
வழக்கறிஞர்கள் துவக்க காலம் என்பது கடினமாக இருக்கும். ஆனால், இன்று இரண்டு ஆண்டுகளுக்குள் மிக சிறப்பாக பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களும் உள்ளனர். இளம் வழக்கறிஞர்கள், உங்களின் மூத்த வழக்கறிஞரிடம் உங்களை நிரூபிக்க வேண்டும். அதற்கு கடினமான உழைப்பு அவசியம்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சட்ட துறையை சேர்ந்தவர்கள் என்றால், உங்களுக்கு தேவையான அத்துறை சார்ந்த நுணுக்கங்களை எளிதாக பெற முடியும்.அதற்கு நீங்கள் உங்களை கடினமாக தயார் செய்து, உங்கள் சீனியரிடம் நிரூபித்து காட்ட வேண்டும். அதன் வாயிலாக, அனுபவமும், பணமும் தானாக வந்து சேரும்.இன்றைய பல சட்டக் கருத்துக்கள் சிவில் சட்டத்தில் வேரூன்றியுள்ளன. சிவில் சட்டத்தைப் படிப்பது முக்கியம். இதை இளம் வழக்கறிஞர்கள் உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தஞ்சை சாஸ்த்ரா பல்கலை சார்பில், கடந்த ஏப்ரலில் இந்த நுால் தொகுக்கப்பட்டது.விழாவின் துவக்கத்தில், மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுடன் இணைந்து, இந்த நுாலை வெளிகொண்டு வந்த அனுபவம் குறித்து, வழக்கறிஞர் அம்ரித் பார்கவ் விவரித்தார். நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.