| ADDED : ஜூன் 23, 2024 04:02 PM
மைசூரு:''லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்காததால், மாநில அரசு, மக்களை பழிவாங்கும் அரசியல் செய்கிறது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்காததால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மாநில அரசு, மக்களை பழிவாங்கும் அரசியல் செய்கிறது. வாக்குறுதி திட்டங்கள் கொண்டு வந்தும், காங்கிரசை மக்கள் கைவிட்டனர். இது அக்கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.மக்களை பழிவாங்கும் அரசியல் செய்வதை மாநில அரசு நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். பல்லாரி மாவட்டம் சண்டூரில் டியோதரி இரும்பு தாது சுரங்கத்தை துவக்குவதற்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்தும், மாநில அரசு அனுமதி அளிக்காதது கண்டனத்துக்குரியது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்த பின், ஒரு தொழில் கூட வரவில்லை. மத்திய அரசு வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளை அமைக்க நினைக்கும் போது, காங்கிரஸ் எதிர்க்கிறது. அனைத்தையும் அரசியலாக்கினால், மாநிலத்தில் எப்படி வளர்ச்சி நடக்கும்.சென்னபட்டணா இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, வரும் 25ம் தேதி புதுடில்லி சென்று, மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். இத்தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் முடிவாகவில்லை. இரு கட்சி தலைவர்களும் ஒன்றாக விவாதித்து முடிவெடுப்பர்.காங்கிரசில் இருந்து யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். அது அவரவர் விருப்பம். மக்கள் முடிவு செய்தால், என்ன முடிவுகள் வரும் என்பதற்கு பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகளே சாட்சி. எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், மக்களின் முடிவே இறுதியானது.இவ்வாறு அவர் கூறினார்.***