புதுடில்லி: ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. நாடு முழுவதும், அரசு அதிகாரிகளுக்கு எதிரான 2,400 ஊழல் வழக்குகள், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல், கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு, பல புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவற்றை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, நாடு முழுவதும் 71 சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகள் ஏற்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விசாரணையில் ஈடுபட உள்ள, இந்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளின் நடவடிக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். மேலும், கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி ஆய்வு செய்து, அவற்றை மேற்கொண்டு பரிசீலிப்பதா அல்லது கைவிடுவதா எனவும் முடிவு செய்யப்படும்.
அவ்விதம், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்போது, சிறிய அளவிலான தவறுகள் எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியத் தொகையில் 10 சதவீத பிடித்தம் செய்யப்படும். பெரிய அளவிலான தவறுகள் எனில், ஓய்வூதியத் தொகையில் 20 சதவீதப் பிடித்தமும், கட்டாயப் பணி ஓய்வும் அளிக்கப்படும். இதுவரை, பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ள ஒரு அரசு அதிகாரி மீது, சிறிய அளவிலான ஊழல் புகார்கள் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், நிர்வாகச் செயலற்ற அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட மாட்டாது. பொதுவாக, அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசமைப்பு சட்டம் 311வது பிரிவில் சில திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தில், குற்றத்தில் இருந்து தப்பிக்கலாம். இதையும் சமாளிக்க, ஊழல் புகார் விசாரணைக்கு வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கும் மேலதிகாரி தன் முடிவை மூன்று மாதங்களில் தெரிவிக்க வேண்டும். அது, அடுத்த உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில்முடிவு எடுக்க வழிவகை செய்யப்படும். ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், உடனடி பதவிநீக்கம் மற்றும் ஓய்வூதியக்குறைப்பு ஆகியவை பாயும் என்றும் கூறப்பட்டது.