மருத்துவமனையில் குழந்தை தலையை கவ்வி சென்ற நாய்
பாட்டியாலா: பஞ்சாபின் பாட்டியாலா மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பாட்டியாலாவில் அரசு ராஜேந்திரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை தெருநாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் தலையை வாயில் கவ்வியபடி சென்றதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அறிந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் விஷால் சோப்ரா விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபத்தில் பிறந்த குழந்தைகள் எதுவும் மருத்துவமனையில் இருந்து காணாமல் போகவில்லை. மேலும் சமீபத்தில் இறந்த மூன்று குழந்தைகளின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. நாய் கவ்வி சென்ற குழந்தையின் தலை வெளியிலிருந்து வந்த நபர் மருத்துவமனைக்குள் வீசி சென்றதுபோல் தெரிகிறது. இது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.