ஹைதராபாத், தெலுங்கானாவின் ஹைதராபாதில் நேற்று நடந்த பா.ஜ., சமூக ஊடக தன்னார்வலர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என, நாடு சுதந்திரம் பெற்றது முதலே காங்கிரஸ் கட்சி கூறி வந்தது. ஆனால், தாஜா செய்யும் அரசியலுக்காகவும், ஓட்டு வங்கிக்காகவும் அதை எதிர்த்து வருகிறது.அண்டை நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் இங்கு குடிபுகுந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படாததை அவர்கள் மிகப் பெரிய அவமானமாகக் கருதினர். குடியுரிமை இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் வாயிலாக பிரதமர் மோடி, அவர்களை கவுரப்படுத்தி உள்ளார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆனால், சி.ஏ.ஏ., குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த சட்டம் குடியுரிமையை வழங்குமே தவிர, இருக்கும் குடியுரிமையை பறிக்காது.இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் சிறுபான்மையினர் தங்கள் குடியுரிமையை இழப்பர் என, காங்., - எம்.பி., ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் மக்களிடம் பொய்களை பரப்பி வருகின்றனர்.நம் நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
உள்துறை அமைச்சகம் சொல்வது என்ன?
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சி.ஏ.ஏ., அமலுக்கு வந்த பின், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி எந்தவொரு இந்திய குடிமகனும் நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டதால், இஸ்லாம் மதத்தின் பெயர் உலகம் முழுதும் களங்கப்பட்டது இஸ்லாம், அமைதியை விரும்பும் மதம். வன்முறை, வெறுப்புணர்வை, அது எப்போதும் போதித்தது இல்லை. எனவே, இஸ்லாம் மீதான களங்கத்தை இந்த சட்டம் துடைத்துவிடும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்த நாடுகளுடன் அரசுக்கு உடன்படிக்கை இல்லை சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை சி.ஏ.ஏ., செய்யாது. எனவே, சி.ஏ.ஏ., குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரானது என முஸ்லிம்கள் கவலை கொள்ள தேவையில்லை நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து பிற மதத்தினரை போலவே முஸ்லிம் மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரம் மற்றும் சலுகைகளில் எவ்வித தடைகளும் ஏற்படாது ஏற்கனவே நடைமுறையில் உள்ள குடியுரிமை சட்டங்களை சி.ஏ.ஏ., ரத்து செய்யாது. எனவே, வெளிநாட்டில் குடியேறிய முஸ்லிம்கள் உட்பட இந்திய குடியுரிமை பெற விரும்பும் எந்தவொரு நபரும், தற்போதுள்ள சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.