மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள், மலைப் பிரதேசங்கள் யாருக்கு தான் பிடிக்காது. பச்சை பசேலென்ற இயற்கை எழில் நிறைந்த உயரமான மலைகளுக்கு சுற்றுலா செல்வதை, இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் விரும்புவர். இவர்களை வரவேற்க நிஷானே மொட்டே மலை காத்திருக்கிறது.அதிகம் வெயில் இல்லாத, இதமான குளிர், பறவைகளின் ரீங்காரம், மரம், செடி, கொடிகள் நிறைந்த காடு, மேடுகள், மேகத்தை முத்தமிடும் உயரமான மலைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என, விரும்புவோருக்கு தகுதியான இடம் நிஷானே மொட்டே மலை. இது குடகின், மடிகேரி அருகில் உள்ளது. பரபரப்பான வாழ்க்கை
அதிக அபாயம் இல்லாத, அற்புதமான சுற்றுலா தலமாகும். பரபரப்பான நகர வாழ்க்கையை மறந்து, சிறிது நேரம் இயற்கையின் மடியில் ஓய்வெடுக்க விரும்பும் சுற்றுலா பயணியர், இங்கு வருகின்றனர். குடகு மாவட்டத்துக்கு சுற்றுலா வருவோர், நிஷானே மொட்டேவுக்கு செல்ல தவறுவதில்லை.பார்க்கும் இடம் எல்லாம் பசுமை, அடுக்கி வைத்தது போன்று மலைகள், காப்பி தோட்டங்கள், ஏலக்காய் தோட்டங்கள், வயல்கள், மேடும், பள்ளமுமான சாலைகளில் சர்க்கஸ் செய்தபடி செல்லும் வாகனங்கள், மலையில் இருந்து பார்த்தால், பள்ளத்தில் ஆங்காங்கே பொம்மைகள் போன்று தென்படும் ஓட்டு வீடுகள், வனத்தின் நடுவில் மலையடிவாரத்தில் இருந்து மேலே எழும் புகை என, மனதை மயக்கும் அனுபவத்தை உணரலாம்.மடிகேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், 300 அடி உயரத்தில் உள்ள நிஷானே மொட்டே மலை உச்சியில் நின்று பார்த்தால், மடிகேரி முழுதும் தெரியும். அன்றைய காலத்தில், ராணுவத்தினர் எதிரிகள் படையெடுத்து வருவதை, இங்கிருந்தே கண்காணித்து தெரிந்து கொள்வராம். நிஷானே மொட்டே மலைக்கு செல்லும் பாதையில் ஜீப்பை தவிர வேறு வாகனங்கள் செல்வது கஷ்டம். எனவே பலரும் நடந்தே செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி
சுற்றுப்புற இயற்கை காட்சிகளை ரசித்தபடி, நடந்து செல்வது மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும். மடிகேரியில் இருந்து புறப்பட்டால், நிஷானே மொட்டே மலையை அடைய, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் தேவைப்படும். இங்கிருந்து 300 அடி எடுத்து வைத்தால், மலை உச்சியை அடையலாம்.இங்கு சமதளமான இடம் இருப்பதால், நடனமாடி, விளையாடி மகிழலாம். அது மட்டுமின்றி கூடாரம் போட்டும், இரவை கழிக்கலாம்.நிஷானே மொட்டே மலைக்கு சுற்றுலா செல்வோர், சிற்றுண்டி, தின்பண்டங்களை கொண்டு சென்றால், நீண்ட நேரம் அங்கு பொழுது போக்கலாம். மலைக்கு நடந்து செல்லும் பாதையின் வழியில் வரும் ஸ்டோன் ஹில்லும் கூட, அழகான சுற்றுலா தலம்தான்.இங்கு நின்று பார்த்தால், மடிகேரியின் அழகான தோற்றம், மனதை ஈர்க்கும். ஸ்டோன் ஹில்லில், மடிகேரிக்கு குடிநீர் வினியோகிக்கும் சுத்திகரிப்பு மையம் உள்ளது. கூட்டுஹொளேவில் இருந்து, இங்கு தண்ணீரை பாய்ச்சி, சுத்திகரித்த பின் மடிகேரிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.மடிகேரியை ஆட்சி செய்த அரசர்களுக்கும், நிஷானே மொட்டேவுக்கும் சம்பந்தம் உள்ளது. வெளியில் இருந்து ஊடுருவும் எதிரிகளை கண்காணிக்க, இந்த இடம் வசதியாக இருந்தது. அதிநவீன ஆயுதங்கள் இல்லாத காலத்தில், எதிரிகள் தங்களின் ராஜ்யத்தை நோக்கி படையெடுத்து வருவதை, துாரத்தில் இருந்து தெரிந்து கொள்ள, உதவியாக இருந்தது.இங்கு காவல் இருந்த வீரர்கள், எதிரிகளின் நடமாட்டத்தை அறிந்து, அரண்மனைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் உடனடியாக படைகள் திரண்டு, எதிரிகளை தாக்கி விரட்டுவர். எதிரிகளை கண்காணித்ததால், இந்த மலைக்கு நிஷானே மொட்டே மலை என்ற பெயர் ஏற்பட்டது.பொதுவாக குடகில் உயரமான இடத்தை மொட்டே என, அழைப்பது வழக்கம். இந்த மலை, சுற்றுலா பயணியருக்கு சொர்க்க பூமியாக விளங்குகிறது.- நமது நிருபர் -
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago