மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
பெங்களூரு : கர்நாடக புதிய முதல்வராக சதானந்த கவுடா பொறுப்பேற்றார். இவ்விழாவை, ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர். 'எடுப்பார் கைப்பிள்ளை'யாக இருக்க மாட்டேன் என்று, சதானந்த கவுடா உறுதியளித்தார். கர்நாடக புதிய முதல்வராக சதானந்த கவுடா நேற்று ராஜ்பவனில் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ராஜ்பவனில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் பரத்வாஜ், சதானந்த கவுடாவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடவுள் பெயரில், சதானந்த கவுடா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.இவ்விழாவில், பதவியிலிருந்து விலகும் எடியூரப்பா, மாநில தலைவர் ஈஸ்வரப்பா, அனந்த குமார் எம்.பி., எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சதானந்த கவுடாவை எதிர்த்து போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான எம்.எல்.ஏ.,க்கள், விழாவை புறக்கணித்தனர். இதில், ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால், கர்நாடக பா.ஜ.,வில் கோஷ்டிப் பூசல் வெட்டவெளிச்சமானது. நேற்று காலையில் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் நடந்த சிற்றுண்டி விருந்தில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். எடியூரப்பா தயார் செய்த அமைச்சர் பட்டியல் தேவையில்லை. எனவே, முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம். அமைச்சர்கள் யார், யார், அவர்களின் இலாகாக்கள் குறித்து டில்லி மேலிடம் முடிவு செய்யட்டும் என்று, பிடிவாதம் பிடித்தனர்.இதையறிந்த சதானந்த கவுடா, அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஷெட்டர் வீட்டில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, அவர் அங்கு சென்றார். கருத்து வேறுபாடுகளை மறந்து விடுவோம். ஆட்சி நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என்று, சதானந்த கவுடா கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து, கர்நாடக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திலும், சதானந்த கவுடா விடுத்த வேண்டுகோளை எதிரணியினர் புறக்கணித்தனர். நேற்று காலையிலிருந்தே சதானந்த கவுடா, எதிரணி தலைவர்கள் வீட்டுக்கு படையெடுத்தார். ஆனால், யாருமே அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வில்லை.ஷெட்டர் கோஷ்டி புறக்கணிப்பால், முதல்வர் மட்டுமே பதவியேற்க முடிந்தது. அமைச்சரவை விஸ்தரிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. இதனால், பா.ஜ., மேலிட தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதவியேற்ற பின், முதல்வர் சதானந்த கவுடாவுக்கு, அனந்த குமார் எம்.பி., ஈஸ்வரப்பா, எடியூரப்பா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின், விதான் சவுதாவுக்கு சென்ற முதல்வர் சதானந்த கவுடா, நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள், மீடியாக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாநில வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். நல்ல நிர்வாகத்தை அளிப்பேன். புன்னகை, உண்மை, நம்பிக்கை ஆகியவை அனைவரது வாழ்க்கையிலும் தேவை. 50 ஆண்டுகளாக சிரித்துக் கொண்டே இருக்கும் நான், வருங்காலத்திலும் அப்படியே தொடருவேன். 'எடுப்பார் கைப்பிள்ளை'யாக இருக்க மாட்டேன். எடியூரப்பா எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நான், அவரின் பேச்சை கேட்டு நடப்பேன், என்ற தோற்றம் உருவாக்கியுள்ளது. இதற்கு, காலம் பதில் சொல்லும். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, கர்நாடகாவுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டங்கள் தொடரும். மேலிட பா.ஜ., தலைவர்களுடன் கலந்து பேசி, அனைவரும் ஒப்புக்கொள்ளும் வண்ணம், இரண்டு, மூன்று நாட்களில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படும். கர்நாடக பா.ஜ.,வில் பிரச்னை இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். பிரச்னை இல்லாத கட்சிகள் இல்லை. அனைத்தையும் சவாலாகக் கொண்டு ஜெயிப்பேன். இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.
1 hour(s) ago
3 hour(s) ago | 7