உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு துணை ராணுவ வீரர்கள் குவிப்பு

டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு துணை ராணுவ வீரர்கள் குவிப்பு

புதுடில்லி:சி.ஏ.ஏ., எனப்படும் 'குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019' அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியின் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ல் குடியுரிமை திருத்த சட்ட மசோதா பார்லி.,யில் நிறைவேறியது. இதையடுத்து, தலைநகர் டில்லி உட்பட நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்தன.டில்லியில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மற்றும் ஷாஹீன் பாக் ஆகிய இடங்களில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். 2020ன் துவக்கத்தில் போராட்டத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராணுவம் குவிப்பு

இந்த சட்டம் பார்லியில்., நிறைவேறிய நான்கு ஆண்டுகளுக்குப் பின், அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.இதையடுத்து, டில்லி உட்பட நாடு முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டில்லியில் வடகிழக்கு மாவட்டத்தில் சீலம்பூர், ஜாப்ராபாத், முஸ்தபாபாத், பஜன்புரா, கஜூரி காஸ் மற்றும் சீமாபுரி உட்பட 43 இடங்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.ஷாஹீன் பாக், ஜாமியா நகர் மற்றும் வடகிழக்கு டில்லியின் சில பகுதிகளில், துணை ராணுவ வீரர்கள் இரவு ரோந்து மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தினர். அதேபோல, ஆத்திரமூட்டும் பதிவுகள் மற்றும் வதந்திகளைத் தடுக்க டில்லி மாநகர போலீசின் 'சைபர் கிரைம்' பிரிவு சமூக ஊடகங்களை கண்காணித்து வருகிறது. தென்கிழக்கு டில்லியிலும் போலீசார் பைக் ரோந்து, துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

55 பேர் கைது

டில்லி பல்கலையில், ஏ.ஐ.எஸ்.ஏ., எனப்படும் அனைத்து இந்திய மாணவர் சங்கத் தலைவர் மாணிக் குப்தா தலைமையில் ஏராளமான மாணவர்கள், பல்கலைக்கு வெளியே நேற்று திரண்டனர். குடியுரிமை சட்டம் அமல்படுத்தியதைக் கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் 55 மாணவர்களை கைது செய்து, பல்கலை வளாகத்திலேயே சிறை வைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை