| ADDED : டிச 05, 2025 08:45 AM
புதுடில்லி: தாயகத்தை நேசித்தும் சுவாசித்தும் வாழ்கிறார் மோடி. இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்தியா வந்துள்ள அதிபர் புடின் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வளங்களை வாங்குவதைப் பொறுத்தவரை, நான் ஏற்கனவே ஒருமுறை பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளேன், அமெரிக்காவே அதன் சொந்த அணு மின் நிலையங்களுக்கு அணு எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. அமெரிக்கா ரஷ்ய எரிபொருளை வாங்க முடியும் என்றால் இந்தியா ஏன் வாங்கக்கூடாது? அமெரிக்காவுக்கு உரிமை இருந்தால், இந்தியாவுக்கு மட்டும் ஏன் உரிமை இல்லை. அவர் (டிரம்ப்) நல்லெண்ணத்துடன் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன். அவருக்கு ஆலோசகர்களும் உள்ளனர். அவரது முடிவுகள் நீண்ட ஆலோசனைக்கு பிறகு தான் எடுக்கப்படுகிறது. வர்த்தக கூட்டாளிகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பது உட்பட முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு, நம்பிக்கை கொண்ட ஆலோசகர்கள் அவருக்கு உள்ளனர், இது இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும். பிரதமர் மோடி இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கு, அர்ப்பணிப்புடன் செயல்படும் நம்பகமான தலைவர். தாயகத்தை நேசித்தும் சுவாசித்தும் வாழ்கிறார் மோடி. இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். பிரதமர் மோடிக்கும் எனக்கும், நம்பகமான நட்பு உறவுகள் உள்ளன. பிரதமர் மோடி உடன் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, அவர் நேர்மையான நபர். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.