| ADDED : டிச 31, 2024 08:58 AM
ஸ்ரீஹரிகோட்டா: 'எஸ்.வி.எஸ்.,02 செயற்கைக்கோள் 2025ம் ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவப்பட உள்ளது' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்றிரவு (டிச.,30) 10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டில் எங்களுக்கு பல பணிகள் உள்ளன. எஸ்.வி.எஸ்.,02 செயற்கைக்கோள் 2025ம் ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-4 திட்டத்துக்கான பணி நடந்து வருகிறது. இந்தத் திட்டம், தனித்தனியாக வெவ்வேறு ராக்கெட்டுகளில் விண்கலன்களை அனுப்பி விண்வெளியில் இணைய செய்வதாக இருக்கும்.பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட், சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஏவப்பட்ட 99வது ராக்கெட் ஆகும். அடுத்து ஆண்டு (2025) துவக்கத்தில் 100வது ராக்கெட் ஏவுதலை வெற்றிகரமாக்க பணியாற்றி வருகிறோம். பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதி என்பதால் இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல்கல் என்று கருதப்படுகிறது. இந்திய ஆய்வு மையத்தை 2035க்குள் விண்ணில் நிறுவ உள்ளோம். இரண்டு விண்கலன்களையும் ஒன்றாக சேர்க்கும் டாக்கிங் பரிசோதனை, 2025ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.