உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரம் வெளியிடுவது கட்டாயமல்ல!

பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரம் வெளியிடுவது கட்டாயமல்ல!

'பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரங்களை தனியே வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. எந்த வாக்காளரின் பெயரும் முன் அறிவிப்பின்றி நீக்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தோர், புலம் பெயர்ந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவானோர் போன்ற காரணங்களுக்காக, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து, அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மனு தாக்கல் செய்தது. உத்தரவு இதை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, நீக்கப்பட்ட வாக்காளர் குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்து, தேர்தல் கமிஷன் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னறிவிப்பின்றி எந்தவொரு வாக்காளரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. எந்தவொரு தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது என்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. விளம்பரம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து புலம்பெயர் தொழிலாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நாடு முழுதும் 246 நாளிதழ்களில் ஹிந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு உதவ, 2.5 லட்சம் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பீஹார் அரசு துறை அதிகாரிகள். நீக்கப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்பது, எந்த சட்டத்திலும் இல்லை. மேலும், என்ன காரணத்திற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டிய அவசியமும் தேர்தல் கமிஷனுக்கு இல்லை. தனிநபரின் பெயர் விலக்கப்படுவது, வாக்காளர் பட்டியலில் இருந்தே அவரை நீக்குவது என்றாகி விடாது. முழுமையான விபரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த வாக்காளர்களை கொண்டது தான் வரைவு வாக்காளர் பட்டியல். வரைவு பட்டியலில் இல்லாதவர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இன்னமும் அவகாசம் உள்ளது. வரைவு பட்டியலை வெளியிடும் முன், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்காகவும் காத்திருந்தோம். ஆனால், யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர், ஒரு ஓட்டு! ஒரு நபர், ஒரு ஓட்டு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கை மீது தாக்குதல் நடத்தும் வகையில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. தேர்தல் நியாய மாகவும், நேர்மையாகவும் நடப்பது முக்கியம். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் கமிஷன் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதற்கு, நாட்டு மக்களின் ஆதரவு தேவை. - ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

ராகுலுக்கு நோட்டீஸ்!

கர்நாடகாவில் ஒரு பெண் வாக்காளர் இரு முறை ஓட்டளித்ததாக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, ராகுலுக்கு கர்நாடக மாநில தேர்தல் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 'தேர்தல் அலுவலர் கொடுத்த தரவுகளின்படி, வாக்காளர் ஷகுன் ராணி இரண்டு முறை ஓட்டளித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால், ஷகுன் ராணியோ ஒரு முறை மட்டுமே ஓட்டளித்ததாக கூறியுள்ளார். எனவே, உண்மையை கண்டறிய உங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து உதவுங்கள்' என, அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ems
ஆக 13, 2025 21:10

ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி எங்க வேண்டுமானாலும் போட்டியிட்டால் அது தப்பு இல்லை... இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்... இரண்டு இடங்களிலும் அப்பதவியில் இருக்க முடியாது... அது போல் ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் ஒரு இடத்தில் மட்டுமே ஓட்டு செலுத்த முடியும்...


ஆரூர் ரங்
ஆக 11, 2025 15:42

செத்துப் போன ஆளு நேரடியா தேர்தல் ஆணையரிடம் வந்து தகவல் சொன்னாதான் அவரது பெயரை நீக்க வேண்டும். அதுதான் ராகுல் சொல்றது.


ஆரூர் ரங்
ஆக 11, 2025 12:40

ஆதார் அட்டையை நிதி, வங்கி, வரி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். மற்றவற்றுக்குக் கட்டாயப்படுத்த கூடாது எனும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை வாபஸ் பெற்று ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க உத்தரவிடவேண்டும். தகுதியற்றவர்கள் தவறான தகவல்களை அளித்து வாக்காளர் அட்டை பெற்றால் பத்து வருட கடுங்காவல் தண்டனை என ஆக்க வேண்டும்.


பாமரன்
ஆக 11, 2025 09:14

தேர்தல் கமிஷன் அதிகபட்சமாக எசமான விசுவாசம் காட்டி சிக்கிய மாதிரி இருக்கு. இந்த முறை உச்சநீதிமன்றம் நங்குன்னு குட்டு வைக்க போகிறது. தான் கொடுத்த வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நாடு முழுக்க ...போறது தவிர மத்த எல்லாத்துக்கும் யூஸ் பண்ற ஆதார் அட்டை அடையாளமா ஏத்துக்க முடியாதுன்னு எந்த பகோடா பீஸு சொல்லி இதுகள மாட்டி விட்டுச்சின்னு தெர்ல.


Sakthi,sivagangai
ஆக 11, 2025 13:21

நீயெல்லாம் கருத்துப் ... போடலைன்னு யார் அழுதா?


Iyer
ஆக 11, 2025 05:24

இறந்தவர்கள் பெயர்களை நீக்க EC க்கு அதிகாரம் உண்டு. 2 அல்லது அதிகமான இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர் பெயரை நீக்கவும் EC க்கு அதிகாரம் உண்டு EC is an independent Constitutional EC ஐ கேள்விகேட்கவோ கண்காணிக்கவோ SC க்கு அதிகாரம் இல்லை. தனிமனிதனின் அடிப்படை சுதந்திரம் பாதிக்கப்பட்டால்தான் SC தலைடமுடியும் லக்ஷக்கணக்கில் பைசல் ஆகாமல் கிடக்கும் வழக்குகளை தீர்க்க SC நடவடிக்கை எடுக்கணும்


Kasimani Baskaran
ஆக 11, 2025 04:02

பணி நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு புலம் பெயர்ந்தவர்களை அவர்கள் வேலை செய்யும் அல்லது வசிக்கும் இடத்தில் வாக்குரிமை வேண்டும். அதை தவறு என்று சொல்லும் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் தடை செய்ய வேண்டும். இரண்டு இடத்தில் வாக்குரிமை இல்லாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் கடைசி நேர கள்ள ஓட்டுக்களை தவிர்க்க முடியும்.


Priyan Vadanad
ஆக 11, 2025 01:46

அரசியல் கலப்பில்லாத நபர்களை கொண்டு தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கச்செய்ய வேண்டும். மகாராஷ்டிராவை தேர்தல் கமிஷனின் தகிடுதித்ததால் பாவக்க ஏமாற்றியதுபோல தென்மாநிலங்களை ஏமாற்றவிடக்கூடாது.


vadivelu
ஆக 11, 2025 07:07

இதற்கே உங்கள் மீது கேஸ் போடலாம். அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் சொல்வார்கள். நீங்கள் அவர்களிடம் இருந்தாவது ஆதாரத்தை வாங்கி வைத்து கொண்டு பின்பே சொல்லணும், இல்லே உள்ளே தள்ளி விடுவார்கள். முட்டு கொடுப்பதற்கு முன் யோசியுங்கள்.


SUBBU,MADURAI
ஆக 11, 2025 13:19

குறிப்பாக உன்னைப் போன்ற கலப்பட மதம்மாறிகளை வைத்து வாக்காளர் பட்டியலை திருத்தக் கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை