உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில்களின் வருவாய் குறித்து கர்நாடக அரசு விளக்கம்

கோவில்களின் வருவாய் குறித்து கர்நாடக அரசு விளக்கம்

பெங்களூரு: 'கோவில்களின் வருவாய், அவற்றின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இது தவிர வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்தப்படாது' என, முதல்வர் சித்தராமையா அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கொண்ட பல கோவில்கள் உள்ளன. மைசூரின் சாமுண்டீஸ்வரி, தட்சிண கன்னடாவில் குக்கே சுப்ரமண்யா, சாம்ராஜ்நகரின் மலை மஹாதேஸ்வரா, உடுப்பியின் கொல்லுார் மூகாம்பிகை என, பல பணக்கார கோவில்கள் உள்ளன.வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எனவே கோவில்களின் வருவாய், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.

அரசு உத்தரவு

இந்நிலையில், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கொண்ட கோவில்கள், 5 சதவீதம் தொகையும், அதற்கு மேற்பட்ட வருவாய் கொண்ட கோவில்கள் 10 சதவீதம் தொகையை, அரசுக்கு வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள், ஹிந்து அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்தன.ஹிந்து கோவில்களின் உண்டியலில் அரசு கைவைக்கிறது. இந்த பணத்தை தேவாலயங்கள், மசூதிகளின் வளர்ச்சிக்கு வழங்க முற்பட்டதாக குற்றஞ்சாட்டின. இதை அரசு மறுத்துள்ளது.இதுதொடர்பாக, கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:ஹிந்து கோவில்களின் வருவாய், அந்தந்த கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். உண்டியலில் வசூலாகும் காணிக்கை உட்பட மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாய், அந்தந்த கோவில்களின் மேம்பாட்டு பணிகளுக்கு செலவிடப்படும். இதுதவிர வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படாது.ஹிந்து கோவில்களின் வருவாய், வேறு நோக்கங்களுக்கும், மற்ற மதத்தவருக்கும் பயன்படுத்துவதாக கூறுவது தவறான கற்பனை. கோவிலில் அன்றாட பூஜைகள் நடத்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவும், திருவிழாக்கள் நடத்தவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் செலவிடப்படுகிறது.

ஆண்டு பட்ஜெட்

இது தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும், கோவில்களின் வருவாயை, இதுவரை அரசு பயன்படுத்தியது இல்லை. அப்படி செய்ய சட்டத்தில் இடமும் இல்லை. உண்டியல் தொகை, அந்தந்த கோவில்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது; அரசு கணக்கில் செலுத்தப்படுவது இல்லை. கோவில்களின் ஆண்டு பட்ஜெட்டுக்கு, அரசிடம் அனுமதி பெற்று செலவிடப்படுகிறது.செலவிட்டது போக, மிச்சமாகும் பணம் அந்தந்த கோவில்களின் பெயரில், தேசிய வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை