சிறுவனிடம் தகாத உறவு கொண்டவருக்கு ஆயுள்
புதுடில்லி:'சிறுவனை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட 47 வயது ஆணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர், 12 வயது சிறுவனைக் கடத்திச் சென்று இயற்கைக்கு மாறான விதத்தில் உறவு கொண்டார். சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர்.இந்த வழக்கு, கூடுதல் குற்றவியல் நீதிமன்ற அமர்வு நீதிபதி பபிதா புனியா முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:குற்றவாளியின் செயல் மிகவும் கொடூரமானது மட்டுமல்ல, ஆபத்தானது. மேலும், மனித இனத்தின் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற நபர்களை சமூகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. சிறுவன் அலறியபோது கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். குழந்தைக்கு கருணை காட்டாத ஒருவர் நீதிமன்றத்தின் அனுதாபத்துக்கு தகுதியற்றவர். குடும்பத்தில் தான் மட்டுமே வருமானம் ஈட்டும் ஒரே நபர் என்ற குற்றவாளியின் கருனை மனுவும் நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.