உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சொகுசு கார்கள் வாங்கும் முடிவை கைவிட்டது லோக்பால் அமைப்பு

 சொகுசு கார்கள் வாங்கும் முடிவை கைவிட்டது லோக்பால் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லோக்பால்' அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக, 5 கோடி ரூபாய் மதிப்பில், சொகுசு கார்கள் வாங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அரசு உயரதிகாரிகள், ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, 2014ல் உருவாக்கப்பட்ட லோக்பால் அமைப்பு, 2019 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

சர்ச்சை

இதில், தலைவர், ஆறு உறுப்பினர்கள் என, மொத்தம் ஏழு பேர் உள்ளனர். இதன் செலவுக்காக, 2025 - 26ம் நிதியாண்டில், 44.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதியாக செயல்படும் தலைவர், நீதிபதிகளாக பதவி வகிக்கும் உறுப்பினர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஏழு பேருக்கும் தனித்தனியாக ஏழு பி.எம்.டபிள்யு., கார்கள் வாங்க, கடந்த ஆண்டு அக்., 20ல் டெண்டர் கோரப்பட்டது. ஒரு காரின் விலை, 70 லட்சம் ரூபாய் என்ற வகையில் ஏழு கார்களுக்கு, 5 கோடி ரூபாய் வரை செலவிட முடிவு செய்யப்பட்டது. லோக்பால் அமைப்பின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், 10 சதவீதத்தை வாக னங்கள் வாங்குவதற்கே செலவு செய்வதா என, சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, கடந்த டிச., 17ல், சொகுசு கார்களை வாங்கும் முடிவு கைவிடப்பட்டது. வாகன செலவுகளுக்காக, 2023 - 24 பட்ஜெட்டில், லோக்பால் அமைப்புக்கு, 12 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை மீறி, மிக ஆடம்பரமான வகையில் வாகனங்களுக்காக 5 கோடி ரூபாய் வரை செலவிட முயன்றது, சலசலப்பை ஏற்படுத்தியது.

வேதனை

இதுகுறித்து முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி கூறுகையில், ''பிரதமர் மோடி சுதேசி பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும்படி வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு லோக்பால் அமைப்பு வெளிநாட்டு கார்களை வாங்க விரும்புகிறது. இது வேதனை அளிக்கிறது,'' என்றார்.

லோக்பால் என்றால் என்ன?

அரசு உயரதிகாரிகள், ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க உருவானது தான் லோக்பால் அமைப்பு. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013ன் படி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி இந்த அமைப்பு உருவாக, 2014 ஜனவரியில் ஒப்புதல் அளித்தார். எனினும், முதல் லோக்பால் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் 2019 மார்ச் 19ல் தான் நியமிக்கப்பட்டார். அதன் பிறகே, இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெறும் சம்பளம் லோக்பால் அமைப்பின் தலைவருக்கு வழங்கப்படும். அதே போல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெறும் சம்பளம், லோக்பால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Perumal Pillai
ஜன 02, 2026 08:54

உண்மையான திருடர்கள் .


visu
ஜன 02, 2026 08:44

சுலபமாக அரசு அதிகாரிகள் இந்தியா தயாரிப்பு கார்கள் இந்த விலைக்குட்பட்டு மட்டுமே வாங்க வேண்டும் என்று சட்டம் போடுங்க


D.Ambujavalli
ஜன 02, 2026 06:07

இவ்வளவு நிதியை ஒதுக்கி உள்ள இந்த அமைப்பு, எத்தனை வழக்குகள், முறைகேடுகள் போன்றவற்றை பொதுவெளிக்கு கொண்டுவந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறது? அரசின்/ மக்களின் பணம் வீணாக வாரி வீசப்படும் வகையில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்


Kasimani Baskaran
ஜன 02, 2026 04:04

தமிழகம் போன்ற ஊழலில் முன்தங்கிய மாநிலங்களில் லோக்பல் அமைப்பு இருப்பதாக தெரியவில்லை. லஞ்சஒழிப்புத்துறை என்ற குப்பை அமைப்பு வேலை செய்வதில்லை.


சிட்டுக்குருவி
ஜன 02, 2026 03:32

இந்த முடிவுக்கு யார்காரணம் என்றறிந்த்து உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் .அவர் லோகபால் அமைப்பிற்கு உண்மையாகஉழைக்க மாட்டார் .மாருதி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது .டாடா மோட்டார் இந்தியாவிலேயே டாப் கார் தயாரிக்கப்பதாக சில தினங்களுக்குமுன் செய்திவந்தது.தினம்தினம் மேக் ன் இந்திய ஸ்லோகத்தை ஊடகங்களில் பார்க்கின்றோம் .அதையும் மீறி BMW ?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ