உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மஹாராஷ்டிரா தேர்தல்: தாய்க்கு இறுதி சடங்கு செய்தபோது வேட்பாளராக திடீர் அறிவிப்பு; இடுகாட்டில் வேட்புமனு தயாரானது

 மஹாராஷ்டிரா தேர்தல்: தாய்க்கு இறுதி சடங்கு செய்தபோது வேட்பாளராக திடீர் அறிவிப்பு; இடுகாட்டில் வேட்புமனு தயாரானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கடைசி நேரத்தில் வேட்பாளரை தேர்வு செய்து சிவசேனா வாய்ப்பு கொடுத்தது. அதுவும், இடுகாட்டில் தாயின் இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தபோது தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவங்கள், தேர்வானவரிடம் வழங்கப்பட்டது. மஹாராஷ்டிராவில், மும்பை உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ல் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முன்தினம் மாலை 3:00 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வின் சிவசேனா சார்பில், நாக்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட யோகேஷ் கோன்னாடே என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், சிவசேனா தரப்பில் இருந்து அவருக்கு எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இதனால், தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காது என அவர் முடிவு செய்தார். இந்தச் சூழலில், நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாய் திடீரென காலமானதால், நேற்று முன்தினம் இறுதிச் சடங்குகளுக்கான வேலைகளில் யோகேஷ் ஈடுபட்டிருந்தார். இடுகாட்டில் தாயின் உடலுக்கு அவர் தீ முட்டும் சமயத்தில், நேரடியாக அங்கு வந்த சிவசேனா கட்சியினர், அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட படிவங்களை அவரிடம் வழங்கி, உடனடியாக வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு தெரிவித்தனர். ஒருபுறம் தாயின் மறைவு; மறுபுறம் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு என, ஒரே சமயத்தில் சோகமும், மகிழ்ச்சியும் மாறி, மாறி அவரை ஆட்கொண்டது. தாயின் இறுதிச்சடங்கின்போது மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அங்கு இருந்தவர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது. நாக்பூர் மாநகராட்சியின் 5வது வார்டில் போட்டியிட யோகேஷூக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும், 8வது வார்டு வேட்பாளராக அவரது மகள் கிருத்திகாவை சிவசேனா களமிறக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்