ரஷ்ய ராணுவத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் விடுதலைக்கு நடவடிக்கை; வெளியுறவு செயலாளர் மிஸ்ரி
புதுடில்லி: ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்தியர்களை விடுவிப்பது தொடர்பான பிரச்னை குறித்து அதிபர் புடினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்று வெளியுறவு செயலாளர் மிஸ்ரி கூறினார். இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினிடம், பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் இரு தரப்பிலும் கையெழுத்தானது. இந் நிலையில் டில்லியில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ரஷ்ய படைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான இந்த பிரச்னை பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ரஷ்ய ராணுவத்திலிருந்து இந்திய குடிமக்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கான எங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்கின்றன. ரஷ்ய ஆயுதப் படைகளில் சேருவதற்கான எந்த ஒரு சலுகையையும் நமது குடிமக்கள் மிக கவனமாக தவிர்க்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். அங்கு சிக்கித் தவிக்கும் பலரை நாங்கள் காண்கிறோம்.மேலும் அவர்களை மீட்டு அங்கிருந்து வெளியே கொண்டு வர பேசி இருக்கிறோம். இவ்வாறு வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.