| ADDED : ஜூலை 11, 2024 05:36 AM
புதுடில்லி: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ரஷ்ய அதிபர் புடினுடன் நடத்திய பேச்சின் போது, 'ரஷ்ய ராணுவத்தில் துணை பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்' என, தெரிவித்தார்.இந்நிலையில் ரஷ்ய அரசு சார்பில் அதன் துாதரக பொறுப்பாளர் ரோமன் பாபுஸ்கின் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முதல்முறையாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் இடம்பெறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பெரும்பாலான இந்தியர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் ராணுவத்தில் சட்டவிரோதமாக சேர்ந்துள்ளனர். ரஷ்ய படையில் 100 இந்தியர்கள் வரை இருப்பார்கள் என நம்புகிறேன். அவர்களை நாங்கள் ஒருபோதும் தேர்வு செய்ததில்லை. அவர்களில் பலர் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். அவர்களை விரைவில் விடுவிப்பது தொடர்பாக முடிவு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும், 'உக்ரைன் போரில் இரு இந்தியர்கள் கொல்லப்பட்டதால் அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் ரஷ்யா குடியுரிமை வழங்கப்படுமா?' என, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாபுஸ்கின், ஒப்பந்த விதிப்படி இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.