மாநகராட்சி லைசென்ஸ் ஹோட்டலுக்கு வேண்டாம்
புதுடில்லி:''ஹோட்டல் நடத்த மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவில் உரிமம் பெறும் விதிமுறை நீக்கப்படும்,'' என, துணைநிலை கவர்னர் சக்சேனா பேசினார்.டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், துணைநிலை கவர்னர் சக்சேனா பேசும்போது, ''தேசிய தலைநகர் பிராந்தியத்தில், ஹோட்டல் நடத்த மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவில் உரிமம் பெறும் விதிமுறை உள்ளது. ''இந்த விதிமுறை நீக்கப்படும். உணவகத் தொழிலை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.ஆனால், துணைநிலை கவர்னரின் இந்தப் பேச்சு குறித்து, டில்லி அரசு மற்றும் மாநகராட்சி இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஹோட்டல், கிளப் மற்றும் விருந்தினர் இல்லத்தில் மதுபானம் பரிமாற, போலீசில் உரிமம் பெறும் விதிமுறை கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், ஹோட்டலுக்கு மாநகராட்சி அனுமதி தேவையில்லை என கவர்னர் பேசியிருப்பதை ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுஉள்ளனர். இதுகுறித்த முறையான அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால், டில்லியில் ஹோட்டல் நடத்த தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் மட்டும் வாங்கினால் போதும் என கூறப்படுகிறது.