| ADDED : பிப் 29, 2024 02:24 AM
பாட்னா:பீஹாரில், நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது.சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுடன், 'மஹாகட்பந்தன்' கூட்டணியை முறித்துவிட்டு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்தது.இதையடுத்து, சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த மவுரி கவுதம், சித்தார்த் சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த சங்கீதா குமாரி ஆகிய மூன்று எம்.எல்.ஏ.,க்களும், ஆளுங்கட்சியின் வரிசைக்கு சென்றனர். அங்கு, பா.ஜ., மாநில தலைவரும், துணை முதல்வராகவும் உள்ள சாம்ராட் சவுத்ரியின் பின்புறம் சென்று அவர்கள் அமர்ந்தனர்.இது, எதிர்க்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்த மூவரும், தங்கள் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, அக்கட்சி தகுதி நீக்கம் செய்தது.