| ADDED : பிப் 10, 2024 06:19 AM
பெங்களூரு மெட்ரோ ரயில், மூன்றாம் கட்ட திட்டத்தில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் திட்டமிடும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்துவது தொடர்பான 65வது இணைப்பு மற்றும் திட்டமிடல் குழு கூட்டம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டு துறையின் கூடுதல் செயலர் எஸ்.ராஜீவ் சிங் தா்கூர் தலைமையில் புதுடில்லியில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.அப்போது, வெளிவட்ட சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தும், ஜெ.பி.நகர் - கெம்பாபுரா; மாகடி சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தும் ஹொசஹள்ளி - கடபாகெரே இடையேயான 44.65 கி.மீ., துாரமுள்ள இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இத்திட்டம் மூலம், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் மெட்ரோவை ஒருங்கிணைக்கும் வகையிலும்; வாகன நெரிசல், பயண நேர சேமிப்பு, எரிபொருள் செலவு சேமிப்பு, நம்பகமான செயல்பாடு மற்றும் செயல்திறன், காற்று மாசடைவது குறையும்.அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பை திட்டமிடுமாறு, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, தேசத்தை கட்டியெழுப்புவதில் இத்திட்டங்கள் முக்கிய பங்காற்றும். மேலும் கணிசமான சமூக-பொருளாதார பலன்களை வழங்குவதுடன், பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டது.- நமது நிருபர் -