அமெரிக்கா செல்ல அனுமதி: அரசுக்கு கார்கே மகன் கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் ப்ரியங்க் கார்கே. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன். இவர் கடந்த 14 முதல் 27 வரை அமெரிக்காவின் பாஸ்டன் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நிபுணர்கள் குழுவுடன் செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். அவரது குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த ப்ரியங்க் கார்கே, கர்நாடகாவின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ப்ரியங்க் கார்கே அமெரிக்கா செல்ல வெளியுறவுத் துறை கடந்த 19ம் தேதி அனுமதி அளித்தது. அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த ஐந்து நாட்களுக்கு பின் இந்த அனுமதி கிடைத்துள்ளது.''முதலில் எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? இந்த தகவல் பொதுவெளியில் பரவியதை தொடர்ந்து பொறுப்பு கூறுவதை தவிர்ப்பதற்காக எனக்கு அனுமதி வழங்கப்பட்டதா?'' என ப்ரியங்க் கார்கே கேள்வி எழுப்பிஉள்ளார்.