உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நாட்டின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

 நாட்டின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர், அடுத்த 15 மாதங்களுக்கு இந்த பதவியில் நீடிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் இரு தினங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து நாட்டின், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார். டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால், ஹிந்தி மொழியில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவர், 2027 பிப்., 9ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு சம்பிரதாயங்கள் முடிந்ததும், பிரதமர் மோடியின் அருகே சென்று, தலைமை நீதிபதி சூர்யகாந்த் வாழ்த்து பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பாரம்பரி ய முறைப் படி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகியோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட னர். இவ்விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் பங்கேற்று, புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல், ராகுல் மீண்டும் காணாமல் போய் உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது, யாருக்கும் தெரியவில்லை. இதுபோன்ற மிக முக்கியமான அரசியலமைப்பு நிகழ்ச்சிகளை, அவர் ஏன் புறக்கணிக்கிறார் என்பது தெரியவில்லை. - அமித் மாள்வியா, ஐ.டி., பிரிவு தலைவர், பா.ஜ., கொலம்பியா, மலேஷியா என பல நாடுகளுக்கு பறப்பதற்கும், அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் ராகுலுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், துணை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி, சுதந்திர தின விழா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு வர மட்டும் நேரம் கிடைக்கவில்லையா? எதிர்க் கட்சித் தலைவருக்கான மாண்பை அவர் குலைக்கிறார் . ஷாநவாஸ் உசேன் மூத்த தலைவர், பா.ஜ.,

சூர்யகாந்த் குறிப்பு...

ஹரியானாவின் ஹிஸார் மாவட்டத்தில், 1962 பிப்., 10ம் தேதி நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்ய காந்த், குருஷேத்ரா பல்கலையில் சட்ட முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சிறு நகரத்தில் வழக்கறிஞராக தன் பணியை துவங்கிய அவர், பின் படிப்படியாக முன்னேறி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியானார். 2018ல் ஹிமாச்சல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அதன்பின், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியல் சாசன சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை அளித்துள்ளார். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை நீக்கி தீர்ப்பளித்தார். பேச்சுரிமை மற்றும் குடியுரிமை தொடர்பாக இவர் வழங்கிய தீர்ப்புகள் தேசிய அளவில் பேசப்பட்டன. பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட வழக்கையும் திறம்பட விசாரித்தார். பாலின பாகுபாடுகளுக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனில் மூன்றில் ஒருபங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ராணுவத்தினருக்கான, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தையும் உறுதி செய்து அரசியல் சாசன அடிப்படையில் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தார். 'பெகாசஸ் ஸ்பைவேர்' வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதியாக இருந்து, முறைகேடுகளை விசாரிக்க சைபர் நிபுணர்களை நியமித்தார்.

பென்ஸ் காரை துறந்த கவாய்

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ, 'மெர்சிடிஸ் பென்ஸ்' காரை, புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்துக்காக விட்டுச்சென்று புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து, பி.ஆர்.கவாய் கடந்த 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நடந்த புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவுக்கு, அரசு வழங்கிய அதிகாரபூர்வ, 'மெர்சிடிஸ் பென்ஸ்' காரில் அவர் வந்து இறங்கினார். விழா முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்ட அவர், அதிகாரபூர்வ காரை புதிய தலைமை நீதிபதிக்காக விட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி