உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதில் பிரச்னை; விவாகரத்தில் முடிந்த 11 ஆண்டு திருமண வாழ்க்கை

பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதில் பிரச்னை; விவாகரத்தில் முடிந்த 11 ஆண்டு திருமண வாழ்க்கை

ஆமதாபாத்: உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த தம்பதி, 2002ல் திருமணம் செய்து கொண்டனர். துவக்கத்தில், கணவன் - மனைவி இடையே உணவு பழக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

தகராறு

சுவாமி நாராயணின் தீவிர பக்தையாக மாறிய மனைவி, மத நம்பிக்கை காரணமாக உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதை தவிர்த்தார். அதே சமயம், கணவரும், அவரது தாயாரும் அவற்றை பயன்படுத்தினர். இது தொடர்பாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, தனித்தனியாக உணவு தயாரிக்கப்பட்டது; எனினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. அதிருப்தி அடைந்த மனைவி, குழந்தையுடன் தன் அம்மா வீட்டுக்கு சென்றார். மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013ல் மனு தாக்கல் செய்தார்.

ஜீவனாம்சம்

அதில், 'உணவு பழக்க வழக்கங்களில் மனைவி சமரசம் செய்யவில்லை. இது கொடுமைப்படுத்துவதற்கு சமம்' என குறிப்பிட்டிருந்தார். விசாரித்த குடும்பநல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. மேலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது. விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மனைவி, மத உணர்வை கணவர் புண் படுத்தி விட்டதாகக் கூறி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, 'பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைத்த போதும் மனைவி வேண்டுமென்றே பிரச்னை செய்தார். 'இது தொடர்பாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்து உள்ளேன்' என கணவர் தெரிவித்தார். 'விவாகரத்தை எதிர்க்கவில்லை' என மனைவி தெரிவிக்கவே, அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை தவணை முறையில் நீதி மன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு உத்தரவிட்டது. பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பான சிறிய பிரச்னை, 11 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
டிச 10, 2025 13:50

சாப்பிட்ட பின் வாயை நல்ல கொப்பளதித்து இருந்தால் மணவாழ்க்கை தொடர்ந்து இருக்கும்..


Venugopal S
டிச 10, 2025 11:24

கடவுள் பக்தி மூட நம்பிக்கையாக மாறும் போது தான் எல்லா பிரச்சினைகளும் வருகிறது!


சிந்தனை
டிச 10, 2025 10:32

அது சரி அதற்கு ஏன் நீதிமன்றம் வழக்கு போட்டு 12 ஆண்டுகளில் தீர்ப்பு கொடுக்க வேண்டும் புரியவில்லை இன்னொரு 100 வருடங்கள் தள்ளிப் போட்டு இருக்கலாம் யாரோ தானே சாகிறார்கள் அதுவரை இவர்களுக்கு சம்பளம் கிடைக்குமே இப்படி எல்லாம் வழக்கிலும் உடனடியாக தீர்ப்பை சொல்லிவிட்டால் சம்பளம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் வேலை காலி ஆகிவிடும்


D.Ambujavalli
டிச 10, 2025 09:58

இதே, அந்தக் கணவன் தரப்பினர் இவற்றை உண்ணாது இருந்து அந்தப் பெண்ணுக்கு உண்ணும் பழக்கம் இருந்திருந்தால், அவள்தான் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பெற்றவர் முதல் அறிவுறுத்தவர். மெல்ல மெல்ல, அவளும் தன்னை மாற்றிக்கொண்டு விடுவாள் . இதுதான் பெரும்பாலும் நடக்கிறது


Raj
டிச 10, 2025 09:32

ஒரு சின்ன பூண்டு, வெங்காயம் குடும்பத்தையே பிரித்து விட்டது. நல்ல பூ, நல்ல வெ.


GV Ganesan
டிச 10, 2025 08:54

இது பூண்டு வெங்காய கேசா?? பலத்த சந்தேக மாக உள்ளது


Senthoora
டிச 10, 2025 07:02

சைவம், அசைவம் உண்ணும் கணவன் மனவியிடையே இப்படி பிரச்சனை வருவதில்லை கோட்டுக்கு போகும் அளவுக்கு. பூண்டு, வெங்காயத்தால் வந்துவிட்டது. சமைய வழிபாடு நல்லதுதான், ஆனால் விட்டுக்கொடுத்துபோகணும். பிள்ளைகள் பாவம்,


Iyer
டிச 10, 2025 06:11

பூண்டும் வெங்காயமும் நல்ல மூலிகைகள் தான். பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தியுடைய மூலிகைகளாகும் - பூண்டும் வெங்காயமும். ஸந்தேஹமில்லை. ஆனால் தினசரி உணவில் பூண்டும் வெங்காயமும் சேர்க்கக்கூடாது. அவை தேவையில்லாத கிளர்ச்சியை உண்டாக்கி நமது தினசரி வாழ்வில் ஊறு விளைவிக்கும்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ