உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் காலமானார்

மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் காலமானார்

புதுடில்லி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், டில்லியில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.நம் அண்டை நாடான மியான்மரில், முன்னர் யாங்கூன் என அழைக்கப்பட்ட ரங்கூன் நகரில், 1929 ஜன., 10ம் தேதி பிறந்த பாலி எஸ்.நாரிமன், 1950 நவம்பரில், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1961ம் ஆண்டில், மூத்த நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய பாலி எஸ்.நாரிமன், முதலில் மும்பை உயர் நீதிமன்றத்திலும், 1972ம் ஆண்டு முதல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார்.அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டுவதில் அதிக அக்கறை காட்டிய பாலி எஸ்.நாரிமன், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக, 1991 - 2010 வரை இருந்துள்ளார். நீதி, அரசியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்த அவருக்கு, 1991-ல் பத்மபூஷண், 2007-ல் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.இந்நிலையில், தலைநகர் டில்லியில் வசித்து வந்த மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று காலை காலமானார்.இவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.நாரிமன் மிகச்சிறந்த வழக்கறிஞர். சாதாரண குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்தார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.பிரதமர் மோடிபாலி நாரிமனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு சிறந்த சட்ட வல்லுனர் மற்றும் அறிவாளி.டி.ஒய்.சந்திரசூட்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

சட்ட பிதாமகன்!

அறிவாற்றலுடன், நீதித் துறையின் திசைகாட்டியாகத் திகழ்ந்த சட்ட வல்லுனர் பாலி எஸ்.நாரிமனுக்கு, சட்ட வரலாற்றில் எப்போதும் தனி இடம் உள்ளது. 'பீஷ்ம பிதாமகன், மன காட்சியை காப்பவர்' என பலராலும் போற்றப்படும் அவர், வெளிப்படையாக பொதுப் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், தன் மனதுக்கு தவறு என தோன்றுவதை துணிச்சலாக கூறிவிடுவார். பல ஆண்டுகளாக ஏராளமான வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய அவருக்கு பதவி ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. 1972 மே மாதத்தில், நாட்டின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனலராக பாலி எஸ்.நாரிமன் நியமிக்கப்பட்டார். 1975 ஜூன் 26ல், அப்போதைய பிரதமர் இந்திரா அறிவித்த, 'எமர்ஜென்சி' முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். ஒவ்வொரு வழக்கறிஞருக்கும், சொலிசிட்டர் ஜெனரல் அல்லது அட்டர்னி ஜெனரலாக பணியாற்ற வேண்டும் என்பது கனவு. ஆனால், அந்த காலகட்டத்திலேயே சொலிசிட்டர் ஜெனரல் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.உயிரிழப்பதற்கு 12 நாட்களுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாலி எஸ்.நாரிமன், 'பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா பின்தங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம்' என தெரிவித்தார். பிப்., 16ல், தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் வெற்றி பெற்றதற்காக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் கடிதம் எழுதினார்.பி.டி.ஐ., எனப்படும் 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா'வின் இயக்குனராகவும் பணியாற்றிய பாலி எஸ்.நாரிமன், பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார். சுதந்திர இந்தியாவின் மிக முக்கிய வழக்கான கேசவானந்த பாரதி வழக்கில், நானாபோய் பால்கிவாலாவுக்கு நாரிமன் உதவினார். 1973ம் ஆண்டு வெளியான தீர்ப்பு, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை வகுத்தது. அரசியலமைப்பை திருத்துவதற்கான பார்லிமென்டின் அதிகாரத்தைக் குறைத்தது. அதே நேரத்தில் எந்தவொரு திருத்தத்தையும் மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்தை நீதித்துறைக்கு வழங்கியது.கடந்த 1984ல் நடந்த போபால் விஷ வாயு விபத்து வழக்கில், யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஆதரவாக நாரிமன் வாதிட்டார். பின், இது தவறு என ஒப்புக் கொண்டு விலகினார். இந்த விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, சொத்து குவிப்பு வழக்கில் வாதாடி, உச்ச நீதிமன்றத்தில் அவர் ஜாமின் பெற்று தந்தார். நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளும் பொறுப்பில் உள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாரிமன் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்று, அந்த ஆணையத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 1999ல் ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட பாலி எஸ்.நாரிமன், 'பிபோர் தி மெமரி பேட்ஸ், தி ஸ்டேட் ஆப் தி நேஷன்' உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதி உள்ளார். இவரது மகன் ரோஹிண்டன் நாரிமன், 67, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ