பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையில் மீண்டும் மோதல் துவங்கியுள்ளது. துணை முதல்வரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், டில்லியில் நேற்று மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து, சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்கும்படி வலியுறுத்தினர். ஆயினும், 'நானே பதவியில் தொடர்வேன்' என சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், முதல்வர் பதவிக்கு சித் தராமையா, சிவகுமார் முட்டி மோதினர். விரக்தி 'தலா இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி' என, இருவருக்கும் இடையில் கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினத்துடன் அரசு அமைந்து இரண்டரை ஆண்டு முடிந்தது. முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. டில்லியில் தன்னை சந்திக்க ராகுலும் அனுமதி கொடுக்காததால், துணை முதல்வர் சிவகுமார் விரக்தியுடன் பெங்களூரு திரும்பினார். ஆயினும், முதல்வர் மாற்றம் குறித்து மேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தும்படி, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் களை அவர் துாண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ராஜே கவுடா, ரவிகுமார் கனிகா, சரத் பச்சே கவுடா, மந்தர் கவுடா உள்ளிட்டோரும், எஸ்.சி., சமூக எம்.எல்.ஏ.,க்கள் சிவண்ணா, சீனிவாசய்யா ஆகியோரும் டில்லி விரைந்தனர். ஆதரவு இவர்கள், சிவகுமார் ஆதரவு அமைச்சர் செலுவராயசாமி தலைமையில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தனர். அப்போது, 'சித்தராமையாவிடம் இருந்து சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வாங்கி தர வேண்டும்' என வலியுறுத்தியதுடன், 'சிவ குமார் முதல்வராகா விட்டால், பழைய மைசூரு மண்டலத்தில் உள்ள ஒக்கலிக சமூக ஓட்டுகள், அடுத்த தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு சென்று விடும்' எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், சிவ குமார் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெங்களூரில் உள்ள சித்தராமையா இல்லத்திற்கு அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று காலை திரண்டு சென்று, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின், மைசூரு சென்ற சித்தராமையா அங்கு அளித்த பேட்டி: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். அவர்கள் எடுக்கும் முடிவை, நான், சிவ குமார் உட்பட யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டும். சிவகுமார் தம்பி சுரேஷ் கூறியது போல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நபர் நான். என் வார்த்தையில் இருந்து பின்வாங்க மாட்டேன். இப்போது நான் முதல்வராக உள்ளேன்; முதல்வராகவே நீடிப்பேன். அடுத்தடுத்த பட்ஜெட்டுகளை நானே தாக்கல் செய்வேன். மல்லிகார்ஜுன கார்கேயை சந்திக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பெங்களூரில் சிவ குமார் அளித்த பேட்டி: நானே முதல்வராக நீடிப்பேன் என்று சித்தராமையா கூறி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். என் ஆதரவாளர்கள் எனக்கு முதல்வர் பதவி கேட்டு டில்லி செல்லவில்லை; அமைச்சர் பதவி கேட்டு சென்றுள்ளனர். நான் காங்கிரசின், 140 எம்.எல்.ஏ.,க்களின் தலைவர். கோஷ்டி அரசியல் என்பது என் ரத்தத்தில் இல்லை. முதல்வர் அவரது கருத்தை கூறி உள்ளார். அது பற்றி நான் பேச மாட்டேன். மேலிடம் சொல்வதை கேட்க வேண்டும் என்று முதல்வரே கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.