தனியார் மயமாகும் அரசு மருத்துவ கல்லுாரிகள்; ஆந்திர அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
நமது சிறப்பு நிருபர்
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளை, தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம்,- ஜ னசேனா,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அனுமதி
இங்கு முந்தைய, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையி லான ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சியில், 17 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணி முழுமையாக முடியும் முன்னரே, ஜெகன் மோகன் ஆட்சியை இழந்தார். அடுத்து வந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், அரசுக்கு ஏற்படும் செலவுகளை கட்டுப் படுத்த திட்டமிட்டது.இதன் காரணமாக, முந்தைய ஆட்சியில் துவங்கிய, 17 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில், 10 கல்லுாரிகளின் கட்டுமானப் பணிகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டிமுடிக்க முடிவு செய்தது. இதன் மூலம் ஆந்திர அரசுக்கு, 3,700 கோடி ரூபாய் மிச்சமாகும் என தெரிவித்தது.இதுதவிர, தனியார் பங்களிப்புடன் இக்கல்லுாரிகளை நிர்வகிக்கும் வகையில், 33 ஆண்டுகள் குத்தகைக்கு விடவும், அதன்பின் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்தது.ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சீட் ஒன்றிற்கு, 1.50 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.விமர்சனம்
இது, அரசு மருத்துவக் கல்லுாரிகளை, தனியார் மயமாக்கும் நடவடிக்கை எனவும் விமர்சித்து வருகின்றனர். புதிதாக கட்டப் பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகள் ஒவ்வொன்றிலும் தலா, 150 சீட்டுகள் இருக்கும். தற்போது, அந்த இடங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ - மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாவர் எனவும் கல்வியாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப் படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவ சீட் ஒன்றிற்கு, 1.50 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.இதேபோல், தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இலவச வெளிநோயாளிகள் சேவைகள் மற்றும் படுக்கைகளை வழங்க வேண்டியது கட்டாயம். அப்படியிருக்கையில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், தனியார் வசம் சென்றால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தடைபடும் என, ஒய்.எஸ்.ஆர். காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.நடவடிக்கை
இதுதவிர, ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியும் ஆண்டுக்கு சராசரியாக, 200 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், இவை அனைத்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசின் சொத்துகளை, குடும்ப நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தந்திர நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடவும் சிலர் முடிவு செய்துள்ளனர்.