சிக்கபல்லாப்பூர்: ''பா.ஜ.,வில் இருந்து காங்கிரசுக்கு வந்தால், முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு, காங்கிரஸ் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கூட கிடைக்காது,'' என்று, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கிண்டல் அடித்து உள்ளார்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகர். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., 'சீட்' எதிர்பார்க்கிறார். ஆனால் எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் மகன் அலோக்கும் சீட் கேட்கிறார். ஒருவேளை பா.ஜ.,வில் சீட் கிடைக்கா விட்டால் மீண்டும் காங்கிரசில் இணைய சுதாகர் விரும்புகிறார். ஆனால் சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:சுதாகர், தற்போது முன்னாள் அமைச்சராக இருக்கிறார். கடைசி வரை அவருக்கு இதே நிலை தான். காங்கிரஸ் அவரை இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆக்கியது. கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, பா.ஜ.,வுக்கு ஓடினார்.சிக்கபல்லாப்பூர் பா.ஜ., சீட் கிடைக்கா விட்டால், காங்கிரசுக்கு வர முயற்சி செய்கிறார். மீண்டும் வருகிறேன். பெங்களூரு வடக்கு தொகுதி சீட் கொடுங்கள் என்று, எங்கள் கட்சி தலைவர்கள் காலில் விழுகிறார். காங்கிரசுக்கு வந்தால், எங்கள் கட்சி அலுவலகத்தில் எழுத்தர் வேலை கூட கிடைக்காது. சிக்கபல்லாப்பூர் எம்.எல்.ஏ.,வாக சுதாகர் இருந்த போது, ஒரு நாள் கூட எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் காலனிக்கு சென்றது இல்லை. ஆனால் நான் தினமும் சென்று வருகிறேன். அவர்கள் வீடுகளில் உணவு சாப்பிடுகிறேன்.கடந்த 10 ஆண்டுகளாக சமூக சேவை செய்கிறேன். இதற்கு பரிசாக சிக்கபல்லாப்பூர் மக்கள் என்னை எம்.எல்.ஏ., ஆக்கி உள்ளனர். நானும், சுதாகரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எங்கள் ஊருக்கு அவர் எதுவுமே செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.