மேலும் செய்திகள்
12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., பணி 97 சதவீதம் டிஜிட்டல்
16 minutes ago
குஜராத்தில் ரூ.3 லட்சத்தை தாண்டிய தனிநபர் வருமானம்
45 minutes ago
புதுடில்லி: ஊழியர் பற்றாக்குறையால், 'இண்டிகோ' விமானங்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து ரத்தாகி வரும் நிலையில், விமானிகளுக்கான புதிய பணி வரம்பு விதிகளை விமான போக்குவரத்து அமைச்சகம் தற்காலிகமாக தளர்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் அடங்கிய உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ள டி.ஜி.சி.ஏ., எனப்படும், மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம், 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ''இரு தினங்களில் நிலைமை சீரடையும்,'' என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். அனைத்து விமான நிறுவனங்களுக்கும், எப்.டி.டி.எல்., எனப்படும் விமான பணி நேர கட்டுப்பாடு விதிகள் நவம்பர் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிப்படி, விமானி மற்றும் விமானத்தின் பிற ஊழியர்களுக்கு வாரத்திற்கு, 48 மணி நேர ஓய்வு, இரவில் விமானிக்கு அதிக சோர்வு ஏற்படுவதால் இரண்டு தரையிறக்கங்கள் மட்டுமே செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வாக்குவாதம்
முதல் கட்டமாக, ஜூலையிலும், முழுமையாக கடந்த நவம்பர் 1ம் தேதியும் இந்த கட்டுபாடுகள் நடைமுறைக்கு வந்தன. இந்நிலையில், தினமும், 2,100க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும், 'இண்டிகோ' நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், விமான பணிகளுக்கான நேரக் கட்டுப்பாடுகளை, டில்லி உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த நவம்பரில் இருந்து, 'இண்டிகோ' விமான பயணியர் பல மணி நேர தாமதத்தை சந்தித்தனர். அந்நிறுவனத்தின் விமான சேவைகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த நான்கு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சமயத்தில், 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 85 சதவீத விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பயணியர் சென்னை, டில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் பணியாளர்களிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணியரின் கடும் எதிர்ப்புகளை சந்தித்ததால், 'இண்டிகோ' நிறுவனம் பயண கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் பல பயணியர் சிரமங்களை சந்தித்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ரத்தான பயணங்களுக்கான கட்டணம் அனைத்து பயணியரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பல நகரங்களில் பயணியர் தங்குவதற்கு ஹோட்டல் வசதிகளும் தரைவழி போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணியருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து இயக்குநரகமும் இப்பிரச்னையில் தலையிட்டுள்ளது. அவர்கள் நேற்று வெளியிட்ட சிறப்பு உத்தரவில், செயல்பாட்டில் உள்ள பணி கட்டுப்பாட்டு விதியில் இருந்து, 'இண்டிகோ'வுக்கு இடைக்கால தளர்வு வழங்கியுள்ளது. அறிக்கை
'இது அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 வரை நடைமுறையில் இருக்கும். அதற்குள் நிலைமையை சரி செய்ய வேண்டும். இனி, 'இண்டிகோ' விமானிகள் பழைய விதிப்படி இரவில் ஆறு முறை தரையிறக்கம் செய்யலாம். எனவே அடுத்த இரு நாட்களில் விமான சேவைகள் சீரடையும்' என அதில் கூறப் பட்டுள்ளது. விமான போக்குவரத்து பாதிப்பு குறித்து அத்துறையின் அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று வெளியிட்ட அறிக்கை: விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை சரிசெய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டி.ஜி.சி.ஏ., விமானி மற்றும் பிற விமான ஊழியர்களுக்கான புதிய பணி விதிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பயணியர் சிரமப்படாமல் இருக்க இந்த முடிவு எடுத்துள்ளோம். மூன்று நாட்களுக்குள் நிலைமை முழுமையாக சீரடையும். மேலும், கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட, 'இண்டிகோ' விமான ரத்துக்கான காரணங்கள், பொறுப்புகள் குறித்து விசாரிக்க, நான்கு பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமைத்துள்ளது. அவர்கள் விரிவான விசாரணை நடத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹூபள்ளியைச் சேர்ந்தவர் மேதா ஷிர்சாகர். இவருக்கும் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்மா தாஸ் என்பவருக்கு நவம்பர் 23ல் புவனேஸ்வரில் திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களின் திருமண வரவேற்பு மணப்பெண்ணின் சொந்த ஊரான ஹூபள்ளியில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க அவர்கள் புவனேஸ்வரில் இருந்து பெங்களூருவுக்கு விமான டிக்கெட் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து தாமதமாகிய விமானம், இறுதியில் ரத்தானதால் மணமக்கள் இருவரும் ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் மண்டபத்தில் உள்ள திரையில் தோன்றி உறவினர்களின் வாழ்த்துகளை பெற்றனர்.
இண்டிகோ விமானங்கள் அதிக அளவு ரத்தானதை தொடர்ந்து, முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தது. டில்லி - சென்னை ஒருவழி பயணம் சாதாரண நாட்களில் 7,000 ரூபாயாக இருக்கும். தற்போது அது, 66,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. டில்லியிலிருந்து கொல்கட்டா, மும்பை ஆகிய நகரங்களுக்கு, 40,000 ரூபாயாக கட்டணம் உயர்ந்துள்ளது. * 'ஏர் இந்தியா' சென்னை - கோவை கட்டணம் ரூ.60,000. *சென்னை - -திருச்சி - மும்பை, பெங்களூரு வழியாக, 36 மணி நேரம் பயணம் செய்து, திருச்சி செல்ல கட்டணம், ரூ.40,000. * 'ஸ்பைஸ் ஜெட்' சென்னை - கொச்சி கட்டணம், ரூ.27,000. * 'ஏர் இந்தியா' சென்னை - டில்லி கட்டணம், ரூ.36,000. * 'ஏர் இந்தியா ' சென்னை - பெங்களூரு கட்டணம், ரூ.17,000. சென்னையில் இருந்து இன்று மதுரை, தூத்துக்குடி, சேலம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களை எந்த விமான நிறுவனமும் நேற்று இயக்கவில்லை .
16 minutes ago
45 minutes ago