உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அனைத்து சொத்து விபரங்களையும் வெளியிட தேவையில்லை!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அனைத்து சொத்து விபரங்களையும் வெளியிட தேவையில்லை!

புதுடில்லி, 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தன் அனைத்து சொத்து விபரங்களையும் வெளியிட வேண்டிய தேவையில்லை' என, வாக்காளர் உரிமை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், தேஜு தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் கரிகோ கிரி வென்றார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.அவர் அரசு குடியிருப்பில் தங்கியிருந்தது தொடர்பான தகவல்களை, வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை. மேலும், வரி மற்றும் கட்டண பாக்கி உள்ளதா என்பது தொடர்பான தடையில்லா சான்றிதழையும் தாக்கல் செய்யவில்லை என, குற்றஞ்சாட்டப்பட்டது.மேலும், அவரது மனைவி மற்றும் மகன் பெயரில், மூன்று கார்கள் பதிவு செய்யப்பட்டது தொடர்பான தகவல்களையும் சொத்து பட்டியலில் வெளியிடாமல் மறைத்ததாக கூறப்பட்டது.இது தொடர்பாக விசாரித்த குவஹாத்தி உயர் நீதிமன்றம், அவரது தேர்தல் வெற்றி செல்லாது என, கடந்தாண்டு ஜூலையில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஒரு வேட்பாளரின் சொத்து விபரங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறை குறித்து தெரிந்து கொள்வதற்கு, வாக்காளருக்கு உரிமை உண்டு. அதன்படியே, வேட்பு மனு தாக்கலின்போது சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது.அதே நேரத்தில், இதை ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. வாக்காளருக்கு தகவல் தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதுபோல், வேட்பாளர்களுக்கும் சில தனிநபர் சுதந்திரம் உள்ளது.அதை எங்கு, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம், மிகவும் விலைமதிப்புள்ள வாட்ச்சுகள் பலஇருந்தால், அந்தத் தகவல் வாக்காளருக்கு தெரிய வேண்டும்.இதன் வாயிலாக வேட்பாளர் எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில், குறைந்த விலையுள்ள, ஒரு சில வாட்ச் வைத்திருந்தால், அந்த தகவல் வாக்களர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த தகவல்களை வேட்பு மனுவில் தெரிவிக்காததை, தகவல்களை மறைத்ததாக கருத முடியாது.வேட்பாளர்கள், தங்களிடம் உள்ள உடைகள், காலணிகள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள் என, அனைத்து தகவல்களையும் தரத் தேவையில்லை. அதே நேரத்தில், அவை மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தால் தெரிவிக்க வேண்டும்.இந்த வழக்கில், வரி, கட்டண பாக்கி உள்ளதா என்பதற்கான தடையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்காததால், அவர் தகவலை மறைத்ததாக கூறப்படுவது ஏற்புடையதாக இல்லை.அதுபோல, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், அந்த கார்களை கரிகோ கிரி, மற்றவர்களுக்கு பரிசாக அளித்துள்ளார் மற்றும் விற்பனை செய்துள்ளார். பெயர் மாற்றம் செய்யப்படாததால், அவர் தகவலை மறைத்தார் என்று கூற முடியாது.ஓட்டளிக்கும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வரை, வேட்பாளரின் தனிப்பட்ட விஷயங்களை ஆழமாக தெரிந்து கொள்வதற்கும், அவரைப் பற்றிய ஒவ்வொரு நிமிட தகவலை தெரிந்து கொள்வதற்கும் வாக்காளருக்கு முழு உரிமை இல்லை. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஏப் 10, 2024 11:07

சதவீதம் அதிகமாக சொத்து இருக்கலாம் ன்னு குமாரசாமி தீர்ப்புக் கூறியது நினைவுக்கு வருகிறது உச்சநீதிமன்றமும் எத்தனை சதவீதம் எக்ஸ்ட்ராவா இருக்கலாம்ன்னு விதிவிலக்கு கூறி விடலாம்


Sampath Kumar
ஏப் 10, 2024 09:28

ஆக மொத்தத்தில் வேட்பாளர்கள் அவர்கள் சொல்லும் கணக்கு போதும் என்கிறது நீதி மன்றம் நல்ல சட்டம்நல்ல நீதி


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 10, 2024 09:24

உயர்ந்த விலை என்றால் எவளவு நீதிபதி அவர்களே? ஏற்கனவே நாட்டில் லஞ்ச ஊழல்கள் தலை விரித்து ஆடுகின்றன அப்படியிருக்க, இப்படிப்பட்ட தீர்ப்புகள் அரைவேக்காட்டு தீர்ப்புக்கள் இன்னும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகின்றன என்ன செய்வது? அரைவேக்காடுகள் எப்படியோ உயர்ந்த இடத்தை அடைந்து விடுகின்றனர் அப்புறம் இப்படிப்பட்ட தீர்ப்புக்களால் நாட்டை குட்டிசுவராக்குகின்றனர்


SIVA
ஏப் 10, 2024 08:53

அப்படி என்றால் பொது மக்கள் வாக்குக்கு பணம் வாங்குவது தவறு இல்லை என்று சொல்லலாம் , அவர்கள் அன்று செய்யும் வேலைக்கி ஊதியமாக அதை காரணமாக சொல்லலாம் , இன்னைக்கி ஒரு முதலமைச்சர் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது கேட்டால் அந்த வீடு என் பெயரில் இல்லை என்று சொல்வார்


பேசும் தமிழன்
ஏப் 10, 2024 07:56

இது என்ன நியாயம்... என்ன தீர்ப்பு... தேவையில்லை என்றால்.. யார் சொத்து பட்டியலை கொடுப்பார்கள்?? ஊழல் மூலம் சேர்த்த சொத்தை மறைக்கத்தானே செய்வார்கள்? இப்படி அரைவேக்காட்டுத் தனமாக தீர்ப்பு கூறினால்.. நீதிமன்றம் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் ???


Dharmavaan
ஏப் 10, 2024 06:48

சொத்தின் வரம்பு எவ்வளவு என்பதை கோர்ட் தீர்மானிக்க வேண்டும் போதம் பொதுவாக சொல்லக்கூடாது கோர்டுதான் எல்லா அரசியல் குற்றவாளிகளுக்கும் உடந்தை கேவலம் எவனும் மாட்ட மாட்டான்


Kasimani Baskaran
ஏப் 10, 2024 05:32

அதாவது ஒருவர் கள்ளத்தனமாக சம்பாதித்த சொத்துக்களை தேர்தல் நிமித்தமாக பட்டியலிட வேண்டிய அவசியமில்லை நீதிமன்றம் ஒரு சட்டத்தை நீர்ந்த்துப்போக வைப்பது அக்கிரமம்


krishnamurthy
ஏப் 10, 2024 07:19

பெரும் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது


spr
ஏப் 10, 2024 03:18

சொத்து விவரங்களை வெளியிட்டால் கூட பல அரசியல்வியாதிகள் அடித்த கொள்ளை மக்களால் அறியப்படுவதில்லை அப்படியிருக்க இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது? உச்ச நீதிமன்றத்தின் போக்கே புரியவில்லை


சுகு
ஏப் 10, 2024 02:35

சாலையில் பயணித்துக் கொண்டிருப்போம். வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தது போல பலர் கூடியிருப்பர். அப்போது அதில் இரண்டொரு போலீஸ் நிற்பது போல தெரிந்தால் ஒரு நிம்மதி. அது போல முன்பெல்லாம் உங்கள் செய்திகளை படிக்கும் முன் செய்தியோடு சம்பந்தப் பட்ட புகைப்படங்களை பார்க்கும் பொது அதில் சுப்ரீம் கோர்ட் படம் இருந்தால் ஒரு நிம்மதி. நல்லது நடக்கும் என்று. இப்போது சுப்ரீம் கோர்ட் படம் பார்த்தால் அவ்வளவு ஆர்வம் வருவதில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை