உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேனரில் முதல்வர் படம் இருட்டடிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர்

பேனரில் முதல்வர் படம் இருட்டடிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர்

ஹூப்பள்ளி: பேனரில் முதல்வர் சித்தராமையாவின் உருவப்படம் இல்லாததால், விழாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்லாட் புறக்கணித்தார்.ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சிக்கு, புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. நேற்று அடிக்கல் நாட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது.

அமைச்சர் கோபம்

இதற்காக மாநகராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டது. பேனரில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சந்தோஷ் லாட் உட்பட மக்கள் பிரதிநிதிகள் உருவப்படங்கள் இருந்தன. ஆனால் முதல்வர் சித்தராமையாவின் உருவப்படம் இல்லை. விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்தோஷ் லாட், பேனரில் முதல்வரின் உருவப்படம் விடுபட்டதை கவனித்தார். கோபமடைந்த அவர், மாநகராட்சி கமிஷனர் ஈஸ்வர் உள்ளாகட்டியை திட்டினார். ஒரு வினாடியும் நிற்காமல், விழாவில் பங்கேற்காமல் வெளியேற முற்பட்டார்.அவரை கமிஷனர் ஈஸ்வர் உள்ளாகட்டி, மேயர் வீணா பரத்வாஜ், மூத்த கவுன்சிலர் வீரண்ணா சவடி ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனாலும் பலனில்லை. அமைச்சர் சந்தோஷ் லாட் அங்கிருந்து வெளியேறினார்.விழாவுக்கு வந்திருந்த காங்., - எம்.எல்.ஏ., பிரசாத் அப்பையா, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவி சுவர்ணாவும் அமைச்சரை பின் தொடர்ந்தனர்.அதன்பின் அங்கு வந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் அரவிந்த் பெல்லத், பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் டெங்கினகாயி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டடம் இடிப்பு

அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:பேனரில் முதல்வர் சித்தராமையாவின் படத்தை இருட்டடிப்பு செய்தது சரியல்ல. மாநில அரசு அனுமதி பெறாமல், மாநகராட்சி வளாகத்தில் இருந்த கட்டடத்தை இடித்துள்ளனர். எனவே புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவில்லை.மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை மதிக்கிறேன். ஆனால் மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டாமா?இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:மத்திய அரசின், ஜல ஜீவன் மிஷன் உட்பட பல திட்டங்களில், பிரதமர் நரேந்திர மோடி உருவப்படத்தை பயன்படுத்துவது இல்லை. எந்த இடத்திலும் பிரதமரின் பெயரையும் குறிப்பிடுவது இல்லை. ஆனால் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அமைச்சர் சந்தோஷ் லாட், சிறு காரணத்துக்காக, மாநகராட்சி அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழாவை, புறக்கணித்து சென்றுள்ளது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை