UPDATED : ஜன 27, 2024 03:39 PM | ADDED : ஜன 27, 2024 03:38 PM
புதுடில்லி: இண்டியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுகிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு '' ஜனநாயகத்தைக் காப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாறாது எங்களுடன் இருப்பார்கள் '' என காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே பதில் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன நடக்கும் என்று பார்ப்போம். அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் முயற்சி. நான் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசினேன். நாம் ஒன்றுபட்டு நல்ல முறையில் போராடுவோம் எனக் கூறியுள்ளனர். இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஜனநாயகத்தைக் காப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாறாது எங்களுடன் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.மம்தாவுக்கு கடிதம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்குவங்கத்தை அடைய உள்ளது. யாத்திரைக்கு சிலர் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ராகுலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். யாத்திரைக்கு மேற்குவங்க அரசு சிறந்த பாதுகாப்பு வழங்கும் என்றாலும், தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.