மூணாறில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
மூணாறு: சுற்றுலாப் பயணிகள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தொடரும் நிலையில், அதனை கண்டு கொள்ளாத அதிகாரிகளால் சுற்றுலா தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூணாறுக்கு வார விடுமுறை, பண்டிகை, கோடை சீசன் ஆகிய நாட்களில் பயணிகள் வருகை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. அதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை தொடர இயலாமல் நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மூணாறை தவிர்க்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் தொடரும் நிலையில், அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பதால் சுற்றுலாத் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூணாறுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. அதனை தவிர்க்கும் வகையில் இ-பாஸ் முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கையும் இல்லை.