உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா உடல்நல குறைவால் காலமானார்

 பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா உடல்நல குறைவால் காலமானார்

மும்பை: பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா, 89, உடல்நலக் குறைவால் மும்பையில் நேற்று காலமானார். ஹிந்தி திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் தர்மேந்திரா. கடந்த 1960ல் வெளியான தில் பி தேரா ஹம் பி தேரே என்ற ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து வந்தார். சாதனை இவர் நடிப்பில் வெளியான ஷோலே ஹிந்தி படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து நாடு முழுதும் தர்மேந்திரா பிரபலமானார். ஆங்கேன், ஷிகார், சீதா அவுர் கீதா, யாதோன் கீ பாரத் உட்பட, 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஹிந்தி சினிமாக்களில் அதிக ஹிட் படங்களை தந்த ஹீரோ என்ற சாதனையையும் படைத்துள்ளார். தர்மேந்திரா, 1973ல் எட்டு ஹிட் படங்களையும், 1987ல் ஏழு ஹிட் படங்களையும் தந்துள்ளார். கடந்த 2023ல் வெளியான இயக்குனர் கரண் ஜோஹரின் ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். தர்மேந்திரா நடிப்பில் உருவான இக்கீஸ் படம், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சுவாசக் கோளாறு பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். உடல் ஆரோக்கியத்தில் முக்கிய கவனம் செலுத்தி வந்த இவர், சில மாதங்களுக்கு முன் சுவாசக் கோளாறு மற்றும் இதயநோய் காரணமாக மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவால் தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதை, அவரின் மனைவியும், பா.ஜ., - எம்.பி.,யுமான ஹேமா மாலினி மறுத்தார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தர்மேந்திராவுக்கு, வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று காலமானார். இந்த தகவலை, இயக்குனர் கரண் ஜோஹர் தன் சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தார். மும்பை போலீசாரும், தர்மேந்திராவின் உடல் இறுதிச்சடங்கு தொடர்பான தகவலை வெளியிட்டு, அவரின் மறைவை உறுதி செய்தனர். மறைந்த தர்மேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும், இறுதிச்சடங்கில் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தகவல் வெளியானது. இவருக் கு, கடந்த 2012ல், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் வழங்கி அப்போதை மத்திய அரசு கவுரவித்தது.

ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்

தர்மேந்திரா மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'தன் திரையுலக பயணத்தில், எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் மனதிலும் நிலைத்து நின்றவர் தர்மேந்திரா. மூத்த நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான அவரின் மறைவு, இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்' என, தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பக்கத்தில், 'தர்மேந்திராவின் மறைவால், இந்திய சினிமாவின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஹிந்தி திரைத்துறையின் முக்கிய அடையாளமான அவர், தான் ஏற்கும் பாத்திரத்திற்கு ஆழமான, வசீகரமான நடிப்பை வழங்கிய அற்புத மனிதர்' என, இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி