உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு மாநகராட்சி தேர்தல் எப்போது? அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் எப்போது? அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கர்நாடகா தலைநகராக உள்ள பெங்களூரு, இன்று சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. நகரில் ஏராளமான ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் உள்ளன. பெங்களூரு சென்றால் ஏதாவது ஒரு வேலை செய்து, பிழைப்பை நடத்திக் கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையை தருகிறது.இதனால் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள், பெங்களூருக்கு குடும்பத்துடன்குடியேறி, இங்கு வசித்து வருகின்றனர். 2024ம் ஆண்டு நிலவரப்படி பெங்களூரு நகரில் மட்டும் 1 கோடியே 40 லட்சத்து 8,262 பேர் வசித்து வருகின்றனர்.

எட்டு மண்டலங்கள்

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில், பி.பி.எம்.பி., எனப்படும் பெங்களூரு மாநகராட்சி முக்கிய பங்கு வகித்து வருகிறது. சாலை அமைப்பது, பூங்காக்களை பராமரிப்பது, கழிவுநீர்க் கால்வாய்களை பராமரிப்பது, மரங்களை நடுதல், கழிப்பறை பராமரிப்பது உட்பட, நகருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், மாநகராட்சி செய்து கொடுக்கிறது.நிர்வாக வசதிக்காக எலஹங்கா, தாசரஹள்ளி, ராஜராஜேஸ்வரிநகர், பொம்மனஹள்ளி, தெற்கு, மேற்கு, கிழக்கு, மஹாதேவபுரா ஆகிய எட்டு மண்டலங்களாக மாநகராட்சி பிரிக்கப்பட்டது. இந்த மண்டலங்களுக்கு உட்பட்டு 198 வார்டுகள் இருந்தன.மாநகராட்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2015ல் தேர்தல் நடந்தது. இதில் 100 வார்டுகளில் பா.ஜ.,வும், காங்கிரஸ் 76 வார்டுகளிலும், ம.ஜ.த., 14 வார்டுகளிலும், சுயேச்சைகள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.இந்நிலையில், 2020ல் ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசு, மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 198ல் இருந்து 243ஆக உயர்த்தியது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது.

நிர்வாக அதிகாரி

அரசியல் நோக்கத்திற்காக வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இருப்பதாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதற்கிடையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்களின் பதவிக்காலம் 2020ம் ஆண்டு, செப்டம்பர் 10ம் தேதி முடிவு அடைந்தது. வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதனால் 2020க்கு பின்னர், மாநகராட்சி தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடந்து தற்போது, 3 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகிவிட்டன. தேர்தல் நடத்தப்படாததால் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகேஷ் சிங்கை, மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக மாநில அரசு நியமித்துள்ளது.

பள்ளங்களால் பலி

கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், வார்டுகளில் உள்ள பிரச்னைகளை, மாநகராட்சி அதிகாரிகளே முன்நின்று நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகரில் உள்ள சாலைகளின் நிலை கந்தல்கோலாகமாக உள்ளது. பள்ளங்களுக்கு முக்கிய சாலைகள் கூட விலக்கல்ல.வேகமாக வரும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் வாகனங்களை இறக்கும் போதோ, பள்ளங்களை தவிர்க்க முயலும் போதோ விபத்தில் சிக்க உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. 2020ல் மட்டும் சாலை பள்ளங்களால் 10 பேர் உயிரிழந்தனர். இதுதவிர சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதாலும், சாக்கடை கால்வாய்களை சரியாக மாநகராட்சி பராமரிக்காததாலும் 2021ல் பெய்த கனமழையால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கவுரவ போர்

பா.ஜ., ஆட்சியில் திட்டமிட்டே மாநகராட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்று, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னரும், மாநகராட்சித் தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தேர்தலை கடந்த ஆண்டே நடந்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் சொன்னபடி நடக்கவில்லை. காங்கிரஸ் - பா.ஜ., இடையிலான கவுரவ போர், அதிகார மோதலால் மாநகராட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போகிறது. மக்களை பற்றியும் நீதிமன்றங்களைப் பற்றியும் யாருக்கும் எந்த கவலையும் இல்லை.கடந்த 3 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்களும், மாநகராட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தெரியாமல் வழிமேல் விழிவைத்துக் காத்து உள்ளனர்.இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி நடத்தப்படாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, முன்னாள் மேயர், கவுன்சிலர், பொதுமக்களிடம் 'தினமலர்' நாளிதழ் சார்பில் கருத்து கேட்கப்பட்டது.கவுன்சிலர்களே போர் வீரர்கள்!முன்னாள் பிரதமர் ராஜிவ், மாநகராட்சிக்கு கண்டிப்பாக தேர்தல் நடக்க வேண்டும் என்றுதான், 1974ல் சட்டம் கொண்டு வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் மாநகராட்சித் தேர்தல் சரியாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் ஒழுங்காக நடத்துவது இல்லை. மாநகராட்சித் தேர்தலை 3 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தாமல் இருப்பது சரி இல்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சித் தேர்தல் நடத்துவதை, எந்த எம்.எல்.ஏ.,வும் விரும்புவது இல்லை. மாநகராட்சித் தேர்தலை நடத்தினால் கவுன்சிலர்களுக்கு அதிகாரம் வந்துவிடும். மக்கள் தங்கள் பக்கம் வரமாட்டார்கள் என்று எம்.எல்.ஏ.,க்கள் நினைக்கின்றனர். மக்கள் கஷ்டத்தை கவுன்சிலர்களால் மட்டுமே தீர்க்க முடியும். என்னை பொறுத்தவரை கவுன்சிலர்களே உண்மையான போர்வீரர்கள். மாநகராட்சி அதிகாரிகள் சரியாக வேலை செய்வது இல்லை. தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, துணை முதல்வர் சிவகுமாரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன்.- பத்மாவதி,முன்னாள் மேயர்,காங்கிரஸ்.ஆட்டம் போடும் அதிகாரிகள்கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, மாநகராட்சி தேர்தலை நடத்தததால், மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். எம்.எல்.ஏ.,வால் மட்டும் தனது தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் நிலவும் பிரச்னைகளை தீர்த்துவைத்துவிட முடியாது. தற்போது குடிநீர் பிரச்னை, கழிவுநீர்க் கால்வாய் பிரச்னை அதிகமாக உள்ளது. இவற்றைத் தீர்க்க, மாநகராட்சி அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. வார்டுகளில் என்ன பிரச்னை உள்ளது என்பது, கவுன்சிலர்களுக்கு மட்டுமே தெரியும். அதிகாரிகளுக்கு முழுமையாக தெரியாது. எம்.எல்.ஏ.,க்களிடம் நாங்கள் வேலை செய்து உள்ளோம் என்று, அதிகாரிகள் பொய் கூறி வருகின்றனர். கவுன்சிலர்கள் இல்லாததால், மாநகராட்சி அதிகாரிகள் ஆட்டம் போடுகின்றனர். மக்கள் தான் பிரச்னை அனுபவிக்கின்றனர். ஒப்பந்ததாரர்களிடம் இருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு, முடியாத வேலைக்கு 'பில்' தொகை வழங்குகின்றனர். இதற்கு ஒரே தீர்வு தேர்தல்.- தன்ராஜ், முன்னாள் கவுன்சிலர், பா.ஜ.,யார் உத்தரவாதம்?நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பிரச்னை உள்ளது. ஒரு வார்டில் கூட பிரச்னையே இல்லை என்று சொல்ல முடியாது. மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. அப்படி இருந்திருந்தால், மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று, அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பர். சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல் நடத்தாமல் இருந்தால், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அமைதியாக இருப்பரா? சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களில் உள்ள, விளையாட்டு உபகரணங்கள் உடைந்துபோய் உள்ளன. அதில் விளையாடும் சிறுவர்கள் உயிருக்கு யார் உத்தரவாதம்? பூங்காக்கள் பராமரிப்பு இன்றி உள்ளன. செடி, கொடி படர்ந்து உள்ளது. நடைபயிற்சி செல்பவர்களை விஷப்பூச்சிகள் கடித்தால் என்ன செய்வது? மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்றால், மாநகராட்சித் தேர்தல் அவசியம்.- சதீஷ்,ம.ஜ.த.,ராம்மந்திரா வார்டுகுறையை கேட்க ஆளில்லைமாநகராட்சித் தேர்தல் நடக்காததால், வார்டுகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. நான் கவுன்சிலராக இருந்தபோது, வார்டு முழுவதும் சுற்றி, மக்கள் பிரச்னை கேட்டு வந்தேன். ஏதாவது பிரச்னை என்றால், எனக்கு மொபைல் போனில் மக்கள் அழைப்பர். உடனடியாக அங்கு சென்று பிரச்னையை சரிசெய்வேன். இப்போது மக்கள் யாரிடம் குறையைச் சொல்ல முடியும்? மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து, சரியான பதில் கிடைப்பது இல்லை. அதிகாரிகளை கேட்க யாரும் இல்லை. - தேவிகா ராணி ஸ்ரீதர், முன்னாள் கவுன்சிலர், காங்கிரஸ்.வேலை செய்வது இல்லை ஆனேக்கல் தொகுதிக்கு உட்பட்ட, சிங்கசந்திரா வார்டு கூட்லு கேட்டில், குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிக்கிறோம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். எல்லோரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள். எங்கள் பகுதியில் சில தினங்களாக குடிநீர்ப் பிரச்னை உள்ளது. சாலைகள் படுமோசமாக உள்ளன. ஆனேக்கல் எம்.எல்.ஏ., சிவண்ணா நன்றாக வேலை செய்கிறார். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள், சரியாக வேலை செய்வது இல்லை. கவுன்சிலர்கள் இல்லாததால், எங்கள் பிரச்னைகளை, யாரிடம் சென்று கூறுவது என்று தெரியவில்லை. அதிகாரிகளும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றனர். தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவில் கொள்ளை நடக்கிறது. எங்களது பிரச்னைகள் அனைத்தையும், எம்.எல்.ஏ.,விடம் கூற முடியாது. அவருக்கும் நிறைய பிரச்னை இருக்கும். எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும், ஒரே நபர் கவுன்சிலர் தான். இதனால் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.- சின்னா,சிங்கசந்திரா வார்டு, கூட்லு கேட்அமைச்சர் வருவது இல்லை சாம்ராஜ்பேட் தொகுதிக்கு உட்பட்ட, செலுவாதிபாளையா வார்டில் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் சில தினங்களாக, குடிநீர்ப் பிரச்னை உள்ளது. இதுபற்றி யாரிடம் புகார் கூறுவது என்று தெரியவில்லை. கவுன்சிலர் இருந்தால், அவரிடம் முறையிட்டு இருப்போம். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., ஜமீர் அகமதுகான், அமைச்சராக உள்ளார். ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அவர் வந்ததே இல்லை. சாலைகளின் நிலை மோசமாக உள்ளது. கழிவுநீர்க் கால்வாய் சுத்தம் செய்யப்படாததால், இரவில் கொசுக்கள் கடிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. குப்பை சரியாக அகற்றப்படுவது இல்லை. மாநகராட்சி குப்பை வண்டிகளில் வருபவர்கள், மக்களிடம் ஏதோ வேண்டா வெறுப்பாக பேசுகின்றனர். அவர்களை கண்டிக்க யாரும் இல்லை. கவுன்சிலர் இருந்தால் தான் வார்டில் நிலவும் பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க முடியும்.- ஸ்டாலின், செலுவாதிபாளையா வார்டு, சாம்ராஜ்பேட்போன் எடுப்பது இல்லை மாநகராட்சித் தேர்தல் நடக்காததால், வார்டுகளில் எந்த வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை. மாநகராட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினாலும், அந்தப் பணிகளால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் தான் லாபம் அடைகின்றனர். செய்யாத பணியை செய்துவிட்டதாக கூறுகின்றனர். கவுன்சிலர்கள் இருந்தால், வாரத்தில் ஒரு முறையாவது வார்டுகளில் வலம் வருவார். அவரிடம் நமது பிரச்னைகளை கூறலாம். அந்த இடத்தில் இருந்தே, அதிகாரிகளுக்கு மொபைல் போனில் பேசி பிரச்னையை தீர்ப்பார். இப்போது அதிகாரிகளுக்கு போன் செய்தால், அவர்கள் எடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும் சரியாக பதில் சொல்வது இல்லை. எல்லா பிரச்னைகளையும் எம்.எல்.ஏ.,க்களிடம் சொல்ல முடியாது. கவுன்சிலர் இருந்தால், அவர் நம்மில் ஒருவர் போல இருப்பார். அவரிடம் உரிமையாக பேசி, பிரச்னைகளை சரிசெய்ய சொல்லலாம்.- திலீப்குமார்,ராஜ்குமார் வார்டு, கோவிந்தராஜ்நகர்அரசு குளறுபடியே காரணம் நகரை பிராண்ட் பெங்களூராக மாற்ற போகிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது. அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நகரில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க, முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வார்டுகளில் நிலவும் பிரச்னைகளை, கவுன்சிலர்களால் மட்டுமே சரி செய்ய முடியும். பாதாள சாக்கடை சரியாக சுத்தம் செய்யாததால், கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்களால் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. சாலைகளின் நிலை படுமோசமாக உள்ளது. தெருக்களில் தான் சாலைகள் நன்றாக இல்லை என்று நினைத்தால், முக்கிய சாலைகளிலும் நிலையும் அதே தான். மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு, அரசின் குளறுபடியே காரணம். மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலை செய்ய தெரியவில்லை. எந்த வேலை எப்படி செய்வது என்பதே கவுன்சிலர்களை அறிவர். கவுன்சிலர்கள் கையில் அதிகாரம் கொடுங்கள். வார்டுகள் பிரச்னை தானாக சரியாகும்.- லதா,நீலசந்திரா வார்டு, சாந்திநகர்பள்ளிக்கு செல்வதில் தாமதம்என் சொந்த ஊர் வேலுார். பாபுசாப்பாளையாவில் வசிக்கிறேன். ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறேன். மாநகராட்சித் தேர்தல் நடக்காததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, கவுன்சிலர் இல்லை. தற்போது குடிநீர், சாலை பிரச்னை உள்ளது. முன்பு 600 ரூபாய் கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கினோம். தற்போது 1,500 ரூபாய் ஆகி உள்ளது. கவுன்சிலர் இருந்திருந்தால், டேங்கர் தண்ணீர் விலையை குறைத்து வாங்கிக் கொடுத்து இருப்பார். - பாண்டியன்,பாபுசாப்பாளையா வார்டு, கே.ஆர்.புரம்கவுன்சிலர்களை தான் தெரியும்எம்.எல்.ஏ.,வால் மட்டும் தனது தொகுதிக்கு உட்பட்ட, வார்டுகளில் நிலவும் பிரச்னையை சரிசெய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கள் வார்டுக்கு எம்.எல்.ஏ., வந்தார். அதன்பின்னர் எட்டி கூட பார்க்கவில்லை. வார்டில் நிலவும் பிரச்னை பற்றி, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் எம்.எல்.ஏ.,வை கை காட்டுகின்றனர். எம்.எல்.ஏ.,விடம் கேட்டால், அதிகாரிகள் தவறு செய்கின்றனர் என்கிறார். மக்கள் யாரிடம் சென்று நியாயம் கேட்பர்? கவுன்சிலர்களை மக்களுக்கு தெரியும். அதிகாரிகள் யார் என்று தெரியுமா? வேலையை செய்யாமல், வேலை முடிந்துவிட்டதாக, அதிகாரிகள் பொய் பேசுகின்றனர். ஒரு வார்டில் பத்து வேலை செய்ய வேண்டும் என்றால், அதில் இரண்டு வேலையை தான் செய்கின்றனர். அதுவும் உருப்படியாக இல்லை. சாலைகள் சரி இல்லாதால் நிறைய விபத்துகள் நடக்கின்றன. பலர் உயிரிழக்கின்றனர். இதுபற்றி அதிகாரிகளுக்கு கவலை இல்லை.- தினேஷ்குமார்,ஆம் ஆத்மி, பிரகாஷ்நகர் வார்டுகுடும்பத்திற்கு இழப்பு கடந்த 2020ல் கொரோனா பிரச்னை இருந்ததால், மாநகராட்சித் தேர்தலை நடத்தவில்லை. அதன்பின்னர் தேர்தலை அப்படியே தள்ளிப் போட்டுவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால், மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம். லோக்சபா தேர்தல் முடிந்ததும், மாநகராட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று, அரசு கூறி உள்ளது. என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை மக்களால் எளிதில் பார்க்க முடியாது. கவுன்சிலர்கள் தான், மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்தார் என்று நாம் கேள்விபடுவது ஒரு செய்தியாக இருக்கும். ஆனால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அது பெரும் இழப்பு. தெருநாய் தொல்லையும் நகரில் அதிகரித்து உள்ளது. சாலையில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் மக்களை விரட்டிச் சென்று நாய்கள் கடிக்கின்றன. இதற்கும் தீர்வு காண வேண்டும்.- திவ்யா,கத்ரிகுப்பே வார்டு, பசவனகுடி- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி