வேட்பாளர் பட்டியல் எப்போது? அமைச்சர்கள் பெரும் பீதி
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேலிடம் எப்போது அறிவிக்குமோ என்று பீதியுடன் மாநில அமைச்சர்கள் உள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடக காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஆளுங்கட்சியாக இருந்தும், இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல், காலம் தாழ்த்துகிறது. யார் வேட்பாளர் என தெரியாமல், தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். கட்சியினர் நெருக்கடி
எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே, வேட்பாளர்களை அறிவிக்கும்படி கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை அறிவிக்கவில்லை.பா.ஜ., முதல் பட்டியலை வெளியிட்ட நிலையில், காங்கிரசும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது. குழப்பங்கள் இல்லாத தொகுதிகளுக்கு, முதலில் வேட்பாளர்களை அறிவிக்கும்படி, அமைச்சர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். தங்களை கட்சி மேலிடம் வேட்பாளராக்கி விடுமோ என, அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். எனவே விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்படி மன்றாடுகின்றனர்.மைசூரு, மாண்டியா, துமகூரு, பெங்களூரு ரூரல், பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு, உடுப்பி - சிக்கமகளூரு, சித்ரதுர்கா, கோலார், சிக்கபல்லாபூர் தொகுதிகளுக்கு, மார்ச் 10க்குள் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கக் கூடும். தனித்தனி பட்டியல்
முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தனித்தனியாக ஆய்வு நடத்தி, தனித்தனி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துள்ளனர். வெற்றி பெறும் திறன், மக்களிடம் உள்ள செல்வாக்கு அடிப்படையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.அந்தந்த தொகுதிகளில், சீட் கேட்போரின் எண்ணிக்கை குறைவில்லை. ஆனால் இவர்கள் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம். இதனால் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தாமதமாகிறது. போட்டியிட மறுத்தாலும், சில தொகுதிகளில் அமைச்சர்களின் பெயர், வேட்பாளர் பட்டியில் இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.காங்கிரசின் முதல் வேட்பாளர்கள் பட்டியலில், நான்கைந்து பெண்களுக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.