உள்ளூர் செய்திகள்

நீங்களும் ஆகலாம் ஏ.சி.எஸ்.,!

வேலை வாய்ப்பை எளிதாக்கும் படிப்புகளில் முக்கியமான ஒன்று ‘கம்பெனி செக்ரட்டரி’! ‘செக்ரட்டரி’களை உருவாக்குவதற்காகவே, மத்திய அரசு நிர்வகிக்கும் ஒரு நிறுவனம் தான், ஐ.சி.எஸ்.ஐ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா’. புதுடில்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்திற்கு, மும்பை, கோல்கட்டா, சென்னை, டில்லி ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மண்டல அலுவலகங்களின் கீழ் நாடெங்கும் பல்வேறு கிளைகள் உள்ளன. கல்வி முறை: ‘கம்பெனி செக்ரட்டரி’ படிப்பில், பவுண்டேஷன் புரோகிராம், எக்ஸிக்யூடிவ் புரோகிராம் மற்றும் புரொபஷனல் புரோகிராம் ஆகிய மூன்று நிலைகள் உள்ளன. மேலும், 15 மாதங்கள் பிராக்டிகல் பயிற்சியையும் நிறைவு செய்ய வேண்டும். பொதுவக, அஞ்சல் வழிக் கல்வியாக ‘கம்பெனி செக்ரட்டரி’ படிப்பு நடத்தப்படுகிறது. எனினும், மண்டல மற்றும் கிளை அலுவலகங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. தரமான நூலக வசதிகள் அங்கே இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எல்லா பாடங்களிலும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர், ஐ.சி.எஸ்.ஐ.,ன் உறுப்பினராக நீங்கள் நியமிக்கப்படுவீர்கள் மற்றும் ஏ.சி.எஸ்., (அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி) என்ற பட்டமும் வழங்கப்படும். தகுதி என்ன?: பிளஸ் 2 முடித்தவர்கள் ‘பவுண்டேஷன்’ படிப்பில் சேர வேண்டும். பட்டப்படிப்பு படித்தவர்கள் நேரடியாக ‘எக்சிகியூட்டிவ்’ படிப்பில் சேர முடியும். கட்டண சலுகை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை உண்டு. வாய்ப்புகள் எப்படி?: கம்பெனி செக்ரட்டரி படிப்பு முடித்தவர்கள் தனியார் நிறுவனங்களில் பணி பெறலாம். வக்கீல், டாக்டர், ஆடிட்டர் போல தனியாகவும் பயிற்சி செய்ய முடியும். நிறுவனம் தொடங்குதல், அரசு அலுவலகங்களில் நிறுவனம் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், நீதிமன்றங்களில் ஆஜராகுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். பைனான்சியல் பிளானிங், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், வெல்த் மேனேஜ்மென்ட், அஸெட் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், பிரைவேட் ஈக்யூடி பைனான்ஸ் போன்ற வளர்ந்துவரும் பல அம்சங்களும், ‘கம்பெனி செக்ரெட்டரி’களின் தேவைகளை அதிகரிக்கின்றன. அரசுத் துறைகளில், இப்படிப்பை முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊக்கத்தொகையும் கிடைக்கின்றன. கிளை அலுவலகங்கள் நடத்தும் வகுப்புகளில் பாடம் எடுக்க முடியும். பிஎச்.டி., படிக்கவும் வாய்ப்பு உண்டு. பின்னர், கல்லூரி பேராசிரியராகவும் பணியில் அமரலாம். மேலும் தகவல்களுக்கு கிளை அலுவலகங்களை அணுகலாம் அல்லது http://www.icsi.edu/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.011-33132333, 011-66204999 என்ற கால் சென்டர் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !