சிறப்பாக படிக்க சில டிப்ஸ்!
மாணவ, மாணவிகளே! ஒரு பாடத்தை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். சரியான வழிமுறைகளை பின்பற்றுவதால் பாடத்தை எளிதாக புரிந்து படிக்க முடியும். உங்களுக்காக நிபுணர்களின் சில பயனுள்ள டிப்ஸ் இங்கே: படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப்பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். வினா எழுப்புதல்பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதர்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறோம்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும். வாசித்தல் அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும். படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும். புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக் கொண்டு வர முடியும். திரும்பச் சொல்லிப் பார்த்தல்வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும். இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றைச் சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும். மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும். மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாகப் பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும். நினைவாற்றல் மேம்பட...ஒரு விஷயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்துக் கொள்வதைவிட, சில குறிப்புகளால் மனதில் வைத்துக் கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணம், ஓசை மற்றும் எழுத்துக்கள் போன்றவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். எந்த விஷயத்திலும் கவனம் சிதறாமல் இருக்க தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். எளிய உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். உணவுப் பொருட்களில் பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அதிக எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நலம். இவை மட்டுமல்லமால் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்ப பின்னணியும், நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.