உள்ளூர் செய்திகள்

பொட்டலம் போடத் தெரியுமா?

தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டுமா? நேர்காணலில் வெற்றி பெற்று,  நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமா? பணியிடங்களில் வெற்றிகளை குவித்து, பதவி உயர்வு, அதிக சம்பளம், கார், அடிக்கடி வெளிநாட்டு பயணம் என சந்தோஷமாக வாழ வேண்டுமா? வாழ்க்கையில் புகழ் பெற வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டுமெனில், பொட்டலம் போட கற்றுக்கொள்ள வேண்டும். பொட்டலம் என்றால் மளிகை கடையில் உப்பையும், புளியையும் பொட்டலம் போடுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் திறமைகளை, அறிவை, அனுபவத்தை பொட்டலம் போடுங்கள். அதாவது, சரியாக ‘பேக்கேஜிங்’ செய்யுங்கள். சரக்கு தரமாக இருப்பது எவ்வளவு முக்கி<யமோ, அதுபோல, பொட்டலம் சரியாக இருப்பதும்  முக்கியம். இன்று அதீதத் திறமை, அறிவு உள்ள பல இளைஞர்கள் தேர்வில், நேர்காணலில் தோற்பதற்கு ஒரே காரணம், - அவர்களுக்கு தங்களிடம் இருக்கும் சரக்குகளைச், சரியாக பொட்டலம் போடத் தெரியவில்லை என்பது தான். உதாரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் ‘டூத்பேஸ்ட்’ சரியான அளவில் பொட்டலம் போடப்பட்டுள்ளதால், அதை சிரமம் இன்றி பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில், ‘டூத்பேஸ்ட்’ பொட்டலம் போடப்படாமல் பெரிய பாத்திரத்தில் இருக்கிறது என்றால், கடைகாரர் நமக்கு ஒரு பேப்பரில் கட்டி தருவார். பின் அதை எப்படி பயன்படுத்த முடியும். நினைத்துபாருங்கள். ரங்கநாதன் என்ற ஒருவர் இந்த பொட்டலம் போடுற கலையால், கோடீஸ்வரர் ஆனார் என்றால் நம்பமுடிகிறதா.  அவர் குடும்பத்தில் அனைவருமே தொழிலதிபர்கள். இவருடைய புரட்சிகரமான கருத்துகளை, சகோதரர்கள் ஏற்காததால், குடும்ப தொழிலைவிட்டு வெளியே வந்து, தனியாக தொழில் துவங்கினார். அந்தக் காலத்தில் ‘ஷாம்பு’ வாங்க வேண்டுமெனில், ஒரு பெரிய பாட்டில் அளவு தான் வாங்க வேண்டும். பாட்டிலில் விற்கும் இதன் விலையோ அதிகம். அதே ஷாம்புவை ரங்கநாதன், சிறிய பொட்டலத்தில் (ஸாஷேயில்) போட்டு, 75 காசுக்கு விற்றார். விற்பனையும் விண்ணைத் தொட்டது. பாட்டில் ஷாம்பு விற்பனை படுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களும் இதனை கடைப்பிடிக்கத் தொடங்கின. அவர் புதிய ‘ஷாம்பு’ வை கண்டுபிடிக்கவில்லை. மாறாக, புதிதாக பொட்டலம் போடும் முறைய கண்டறிந்தார்; வெற்றியும் பெற்றார்.   -வரலொட்டி ரெங்கசாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !