உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வை வெல்ல கோச்சிங் மையம் செல்ல வேண்டுமா?

எம்.பி.ஏ., படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை வெல்ல, கோச்சிங் வகுப்புகளுக்கு செல்வதா? என்பதைவிட, ஒருவரின் இலக்கு தெளிவாகவும், வலுவாகவும் இருப்பதுதான் முதல் முக்கியம். நீங்கள் தீர்க்கமாக இருந்து, சரியான முறையில் தேர்வுக்கு தயாராகும் செயல்பாட்டை மேற்கொண்டால், கோச்சிங் வகுப்புகள் போன்ற கூடுதல் வழிகாட்டுதல்கள் தேவையில்லை என்றே கூறலாம். அதேசமயம், கோச்சிங் வகுப்புகள் உங்களுக்கு உதவியே செய்யாது என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு தரமான கோச்சிங் வகுப்பு என்பது, தேர்வுப் பற்றி ஒரு நல்ல புரிதலையும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவையும் அளிக்கிறது. இதன்மூலம், உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு, தவறுகளை சரிசெய்துகொள்ள முடியும். அதேசமயம், கோச்சிங் வகுப்புகளுக்கு செல்லாமல், எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வை வெல்லவே முடியாது என்று சொல்வது ஏற்க முடியாத ஒரு கூற்று. கோச்சிங் வகுப்புகள் செல்லாமலேயே நிச்சயம் தேர்ச்சிபெற முடியும். ஆனால், மாதிரித் தேர்வுகளை ஒவ்வொருவரும் கட்டாயம்எழுதிப் பார்க்க வேண்டும். ஆங்கிலம், Quantitative கணிதம் மற்றும் Data Interpretation ஆகிய அம்சங்களில் ஒருவரின் தெளிவு மற்றும் அறிவு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட்டு, அவர் கோச்சிங் செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்பதைப் பற்றி முடிவு செய்யலாம். சில கோச்சிங் மையங்கள், நன்கு திட்டமிடப்பட்ட செயல்பாடுகளை வைத்திருக்கலாம். அது உங்களுக்கு நன்மை தருவதாகவும் இருக்கலாம். ஆனால், இறுதியாகப் பார்த்தால், முடிவு உங்களுடையதுதான். கடந்த ஆண்டுகளின் CAT கேள்வித்தாள்களைப் பார்ப்பது மிக மிக முக்கியமான தேவைகளில் ஒன்று. பொதுவாக, பழைய கேள்வித்தாள்களைப் பார்க்கும்போது, அதில் கேட்கப்பட்ட கேள்விகள், கணிசமான அளவில், 10 மற்றும் 12ம் வகுப்பு நிலைகளில் இருப்பதை உணரலாம். மேலும், ஒரு குழுவாக இணைந்து, இணையம் உள்ளிட்ட பலவிதமான அம்சங்களில் கிடைக்கும் படிப்பு உபகரணங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி படிப்பது, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும். அதேசமயம், கோச்சிங் வகுப்புகளால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றையும் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். * கோச்சிங் வகுப்புகளில் தொடர்ச்சியான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் சிறப்பான பயிற்சி கிடைக்கிறது. * ஒவ்வொரு மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் பின்பற்றப்படும் சேர்க்கை நடைமுறைகளில் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்கள் கோச்சிங் வகுப்புகளில் கிடைக்கும். ஒரு கோச்சிங் வகுப்பில் சேரும் முன்னதாக, ஆலோசகர்களின் புகழ் மற்றும் தரம் ஆகியவற்றை அறிந்து, அதில் பயிற்சி பெற்றவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதையும் உறுதிசெய்து சேர்வது நல்லது. ஆன்லைன் கோச்சிங் மையங்கள் CAT, MAT and NMAT போன்ற தேர்வுகள் ஆன்லைன் முறையில் மாறிவிட்ட பிறகு, இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான கோச்சிங் முறையும் ஆன்லைனில் மாறிவிட்டது. சில முக்கியமான ஆன்லைன் கோச்சிங் மையங்களின் பெயர்கள் பின்வருமாறு, TestFunda.comTCYOnline.comTopCATCoaching.com100Percentile.com.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !