உங்களுக்கான துறை எது?
இன்று இந்திய கல்வி முறைப்படி நமக்குரிய படிப்பை நோக்கி நகரும்போது அதற்கான நுழைவு வாயிலில் எல்லோரும் சமம். காகம், குரங்கு, யானை, பாம்பு, கடல்மீன், ஓநாய் இப்படி எதுவாக நம்மைப் பார்த்தாலும் ‘அங்கே இருக்கும் மரத்தில் ஏறுங்கள் பார்க்கலாம்‘ என்பது போலத்தான்! ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தனது விருப்பம், திறன், ஆற்றல், பலம், சொந்த குணநலன், எதிர்கால கனவு இவற்றைப் பற்றி நினைத்துப்பார்க்கவேண்டும். இதுதவிர, பெற்றோர், குடும்பத்தார், நண்பர்கள், ஆசிரியர்கள் - அனைவரும் தங்களின் மீது வைத்திருக்கும் அபிப்ராயம், பொழுதுபோக்கு விஷயங்கள், கல்விஅல்லாத பிறதிறன்கள், இவை அனைத்துமே தன்னை பற்றி அறியபெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு மாணவனும் மாணவியும் நிச்சயமாக தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதில் ஐயம் வேண்டாம். எப்படி அவர்களின் கட்டை விரல்ரேகை, கண்ணின் தீட்சண்யம், கற்பனை வெவ்வேறாக இருக்கிறதோ அப்படி அவர்கள் எல்லோரும் பலவகைப்பட்டவர்கள்! * யதார்த்தவாதிகள் எனும் வகைப்பட்டவர்கள், மிகவும் பிராக்டிகல் மற்றும் கூச்சசுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவேளை மெக்கானிக், சமையல் கலைஞராக வரலாம். * புலன்அறிவு கொண்ட தேடுதல் வகைப்பட்டவர்கள் மிகவும் ஆர்வம்மிக்கவர்களாக, ஆராய்ந்து அலசிப்பார்ப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பின்னாளில் செய்திஆசிரியர்கள், ஆய்வுக்கூடத்தின் நிபுணர்களாக வரலாம். * சமூக எண்ணம் கொண்டவர்கள் புரிதல் உள்ளவர்களாக, எளிதில் எல்லோரிடமும் பழகுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆசிரியர்களாக, மனநலஆலோசகர்களாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. * பாரம்பரியத்தோடு இருக்கும் வகைப்பட்டவர்கள் மிகவும் திறமைசாலிகளாக, அதிக கற்பனை இல்லாதவர்களாக இருப்பர். இவர்கள் கணக்காளர்கள், வங்கி ஊழியர்கள் என்று பின்னாளில் வருவார்கள் எனச்சொல்லலாம். * துருதுருப்பு உள்ளவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக, பெரிய சாதனை படைக்க விழைபவர்களாக இருப்பார்கள். இவர்கள் வக்கீல்கள், தொழில்அதிபர்கள் என்று ஆவதற்கு வாய்ப்பு அதிகம். * கலைத்தன்மை கொண்டவர்கள் மிகவும் கற்பனை உள்ளவர்களாக, எந்தவிதிகளுக்கும் கட்டுப்படாதவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், டிசைன் நிபுணர்கள் என்று வருங்காலத்தில் வரலாம். இப்போது புரிந்திருக்கும் ஒவ்வொருவர்க்கும் தான் எப்படிப்பட்டவர் என்று... முதலில் தன்னை தான் அறிதல் மிக முக்கியம் ஆகிறது அல்லவா? யாரோ சொன்னார், யாரோ செய்கிறார் என்றெல்லாம் நாம் அதையே செய்ய முடியாது. இன்று எந்ததுறை சிறப்பாக இருக்கிறதோ அது ஒருவர் படித்து முடித்துவிட்டு மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து வேலை தேடும்போது எப்படி இருக்கும் என்று யார் அறிவார்? மது கனவைத் திணிக்கும் பெற்றோர், தன்னோடு வரவேண்டும் என்று வற்புறுத்தும் நண்பர் கூட்டம் இவர்கள் எப்படி மற்றவர் எதிர்காலத்தை தீர்மானிப்பது... சொல்லுங்கள் பார்க்கலாம்! ஒவ்வொரு இளைஞரும், தான் பின்னாளில் என்னவாக வரவேண்டும் என்கிற ஒருகனவு மற்றும் இலட்சியம் நிச்சயம் வைத்திருப்பார்கள். அது ஒரு இன்ஜினியர், டாக்டர், வங்கியாளர் என்ற வேலை சம்பந்தப்பட்டது என்பதால் அதுவாக நான் மாற என்ன படிக்க வேண்டும் என்று சிந்திப்பதே சிறந்தவழி. உதாரணத்திற்கு விமானம், ராக்கெட் சம்பந்தமான ஒரு தொழிலில் சேர விருப்பம் என்றால் பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல் குரூப் எடுத்திருக்க வேண்டும். ஏரோநாடிகல் இன்ஜீனியரிங் எடுத்துப்படிக்க வேண்டும். கட்டுமானத்தொழிலில் ஆர்கிடெக்ட் ஆக விருப்பம் என்றால் பி.ஆர்க்., எனும் 5 வருடப்படிப்பை தேர்வுசெய்தல் வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் குரூப் எடுத்து படித்து, இந்தப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே இந்தபடிப்பு இருக்கிறது. ஆடை வடிவமைப்பில் விருப்பம் என்றால் நிப்ட் எனப்படும் பேஷன் தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி நிறுவனங்கள் அல்லது என்.ஐ.டி., எனப்படும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனங்களை அணுக வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள இக்கல்வி நிறுவனங்கலின் கிளைகளை அணுகி அதற்கான நுழைவுத்தேர்வு மூலம் சேரலாம். இவை போல, இன்று வழக்கமான அல்லது பாரம்பரியமான படிப்பினைத் தாண்டி தடயவியல், சுற்றலா, பாதுகாப்பு ஆய்வுகள், வனத்துறை, மருத்துவமனைநிர்வாகம், இன்டீரியர் அலங்காரம், ஊடகவியில், பணியாளர் நிர்வாகம், மெகட்டிரானிக்ஸ், நானோதொழில்நுட்பம், நியூட்ரீஷன், பைலட் லைசென்ஸ், பிசியோதெரபி, கால்நடை மருத்துவம், ஈவென்ட் நிர்வாகம், விஷுவல் கம்யூனிகேஷன் இப்படி பல்வேறு புதிய படிப்புகள் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. முக்கியமாக என்ன படிப்பு, அதை எங்கே படிக்க வேண்டும், என்ன தகுதி, நுழைவுத்தேர்வு எப்படி, நுழைவுத் தகுதி மதிப்பெண், எவ்வளவு ஆண்டுகள்படிப்பு, படித்தவுடன் வேலைவாய்ப்பு, இதுவரை படித்தவர்கள் சம்பள விவரம் என்று அனைத்து விவரமும் சேகரித்த பின்பு முடிவு எடுக்கலாம். எதுபடித்தாலும் விரும்பிப்படித்தால் வெற்றி நிச்சயம். கட்டாயத்தின் பேரில் கல்வி என்றால் கண்டிப்பாக தோல்வி தான்! இதனை நினைவில் கொண்டு வெற்றி பெறுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! - டாக்டர். பாலசாண்டில்யன்