உள்ளூர் செய்திகள்

‘கல்விக்கு விடுமுறை கிடையாது’

அதிகளவிலான பொறியியல் கல்லூரிகளின் வருகையால், இன்று அனைவருக்கும் பொறியியல் கல்வி என்பது சாத்தியமாகியுள்ளது. இது வரவேற்கத்தக்க சூழல்! அதேசமயம், அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளுக்கும் ‘இன்ஜினியரிங் சீட்’ கிடைத்தாலும், கல்லூரியில் சேர்ந்த அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதில்லை. இதற்கு, பலவித காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும், ஆங்கில அறிவு குறைவாக இருப்பவர்களும், கிராமப்புற மாணவர்களும் சற்று சிரமப்படுகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சியும், ஆங்கில மொழிப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்க, பிரிட்டிஷ் உட்பட அனைத்து நூலகங்களுக்கும் சென்று, அதிகமாக வாசிக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்த பிறகு, படிப்பில் முழு கவனம் செலுத்தாமல், ‘அரியர்’ வைக்கும் மாணவர்களுக்கு, வளாக நேர்காணலில், வேலை வழங்க எந்த தொழில் நிறுவனமும் முன்வருவதில்லை. எனவே, பொறியியல் படிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களும், பொறியியல் படிப்பில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு, பள்ளி படிப்பில் புரிந்து படிக்காததே பிரதான காரணம். ‘மனப்பாடம் செய்து தேர்வு எழுதினால் போதும், அதிக மதிப்பெண் பெற்றுவிட முடியும்’ என்ற நிலையில் பாடத்திட்டம் இருக்கக்கூடாது. இத்தருணத்தில், சமச்சீர் கல்வித் திட்டத்தில் இருந்து வரும் மாணவர்களைவிட, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை! வேண்டுகோள்மாணவர்கள், படிப்பில் எத்தகைய மன அழுத்தத்தையும் தாங்கும் திறன் படைத்தவர்கள். அவர்களுக்கு, கல்வி எப்போதுமே சுமையல்ல! படிப்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை. மாணவர்களை சிறப்பாக படிக்க வைப்பதில் கடுமையாக நடந்துகொள்வதில் தவறும் இல்லை! மழை, வெயில் காலங்களில் கல்லூரிகள் செயல்படக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. கல்விக்கு விடுமுறை இல்லை! மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து மாணவர்களது பெற்றோரையும், கல்லூரி நிர்வாகம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது, நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும். அதன்மூலம், பெற்றோரது எதிர்பார்ப்புகள், குறை, நிறைகளை அறிந்து அதற்கேட்ப கல்லூரிகளால், சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு எங்கள் கல்வி நிறுவனம் ஓர் உதாரணம்! -முனைவர் கே.வாசுதேவன், தலைவர், பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !