உள்ளூர் செய்திகள்

யுனெஸ்கோவின் ஜி.இ.எம்., 2022 அறிக்கை!

யுனெஸ்கோ, ஜி.இ.எம்., எனும் புதிய உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை 2022யை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றில் தெற்கு ஆசிய நாடுகளின் பலதரப்பட்ட கல்வி சூழல் குறித்து விவரித்துள்ளது.அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சங்களும், பரிந்துரைகளும்:* தெற்கு ஆசியாவில் கல்வி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும், அரசு சாரா மற்றும் தனியார் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஆகவே, கல்வியின் அனைத்து நிலைகளிலும் ஒரு கல்வி முறையின் பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.* அரசு கல்வி நிறுவனங்கள் வழங்கும் சேவை மற்றும் தரம் போதிய அளவு இல்லாததால், பெற்றோர் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மற்றும் நேபாளத்தில் நான்கில் ஒரு பகுதியினர் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலுகின்றனர். * இந்தியாவில் உள்ள 90 சதவீத ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை மட்டுமே நிதி ஆதாரமாக கொண்டுள்ளன.* ஆங்கில மொழிக் கல்வி மீதான எதிர்பார்ப்பு, இலங்கையில் சர்வதேசப் பள்ளிகளின் உயர்வைத் தூண்டியுள்ளது.* பூட்டானில், செலவு செய்ய போதிய வசதி உள்ள குடும்பங்களால் மட்டுமே, துவக்க கல்விக்கு முந்திய கல்வி வழங்கும் பள்ளிகளில் சேர்க்கை பெறப்படுகிறது.* புதுமையான அம்சங்கள், பெரும்பாலும் தனியாரால் மேற்கொள்ளப்படும் அதேநேரம், எந்த வகை நிறுவனமும் அதில் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கவில்லை.* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரே கல்வி முறையை பின்பற்றவில்லை. இத்தகைய பிரிக்கப்பட்ட கல்வி முறைகள் மற்றொரு முக்கிய பிரச்சினை.* திறன் வளர்ப்பு பயிற்சிகள் வெற்றி பெறுவதற்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்பாடு இதனை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.* தெற்கு ஆசியாவில், அரசு போதிய நிதியுதவி அளிக்க இயலாத நிலையால், குடும்பங்கள் செலவினங்களால் சுமைக்கு உள்ளாகின்றன. பொருளாதார வசதி படைத்தவர்கள் அதிக செலவு செய்வது உயர் தரத்திலான கல்வியை பெறுவதால், வாய்ப்புகளில், பெரும் சமத்துவமின்மையை உருவாக்குகிறது. * அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான சலுகைகள் மற்றும் பணிச்சூழல்கள் இருப்பது இல்லை. * தெற்கு ஆசிய பகுதிகளில், நிலவும் துண்டாடப்பட்ட கல்வி முறைகளின் பலவீனத்தை கோவிட்-19 அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் புள்ளி விபரங்களுடன் யுனெஸ்கோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-சதீஷ்குமார் வெங்கடாசலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !