உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுகளின் தன்மைகளும், வித்தியாசங்களும்...

சி.ஏ.டி, எக்ஸ்.ஏ.டி, மேட், சிமேட், ஐ.ஐ.எப்.டி, ஸ்னாப், என்.எம்.ஏ.டி., ஆட்மா மற்றும் ஐ.பி.எஸ்.ஏ.டி., போன்ற பல பிரபல மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. இத்தகைய நுழைவுத் தேர்வுகளின் வேறுபாடுகள் எதன் அடிப்படையிலானவை என்பதை இக்கட்டுரை அலசுகிறது. மதிப்பெண் ஏற்பு எத்தனை வணிகப் பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன என்பது ஒரு முதன்மையான அம்சம். உதாரணமாக, AICTE -ஆல் நடத்தப்படும் சிமேட் தேர்வை எடுத்துக் கொண்டால், அதன் மதிப்பெண்களை 1,500க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் ஏற்றுக் கொள்கின்றன. அதேசமயம், TANCET, ICET, KMAT போன்று மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளாக இருந்தால், அந்த தேர்வுகளின் மதிப்பெண்களை, அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட பல்கலையின் சார்பில் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், அப்பல்கலையின் எம்.பி.ஏ., துறை அல்லது அப்பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றால் அந்த மதிப்பெண்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. தேர்வு நடத்தப்படும் முறை கடந்த 2009ம் ஆண்டு முதல், பிரதான எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுகளான சி.ஏ.டி., என்.எம்.ஏ.டி., மற்றும் மேட் போன்றவை, பேப்பர் முறையிலிருந்து கணினி முறைக்கு மாறிவிட்டன. அதேபோல், ஆட்மா(ATMA) மற்றும் ஐ.பி.எஸ்.ஏ.டி., போன்ற தேர்வுகள், கணினி தேர்வாக மாறிவிட்டன. எக்ஸ்.ஏ.டி., ஐ.ஐ.எப்.டி., ஸ்னாப் மற்றும் எம்.ஐ.சி.ஏ.டி., போன்றவை இன்னும் பேப்பர் - பென்சில் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. எப்போதெல்லாம் நடத்தப்படுகின்றன? சில தேர்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றன. சில தேர்வுகள், ஒரே ஆண்டில் ஒரு முறைக்கும் அதிகமாக நடத்தப்படுகின்றன. ஒரு தேர்வை மீண்டும் எழுதுகையில், எதில் அதிக மதிப்பெண் இருக்கிறதோ, அதுவே கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர்கள் shortlist செய்யப்படுகிறார்கள். தேர்வு முறை டெஸ்டிங் பிரிவு, காலஅளவு மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன. அதேசமயம், அனைத்துவிதமான எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுகளிலும், Quantitative ability (Mathematics), Verbal ability (English skills), Data Interpretation / Data Sufficiency and Reasoning (Analytical, Critical, Verbal, Visual) போன்ற பொதுவான அம்சங்கள் கட்டாயம் இருக்கும். தேர்வுகளின் பெயர்களில் வித்தியாசங்கள் இருந்தாலும், அதில் கேட்கப்படும் கேள்வியின் தன்மைகள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றில் வித்தியாசம் இருக்காது. மேலும், XAT, CMAT, IIFT, SNAP, MICAT, IBSAT ஆகிய தேர்வுகளில் பொது விழிப்புணர்வு தொடர்பான கூடுதல் பிரிவு இடம் பெற்றுள்ளது. மேலும், XAT, TISSNET, MICAT போன்ற தேர்வுகளில், கட்டுரை எழுதுதல் போன்ற சப்ஜெக்டிவ் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வுகளும், அதை ஏற்கும் கல்வி நிறுவனங்களும் * சி.ஏ.டி(CAT)  -  100க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் * எக்ஸ்.ஏ.டி.,(XAT)  -  100க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் * எம்.ஏ.டி.,(MAT)  -  150க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் * சிமேட்(CMAT)  -  1500க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் * ஏ.டி.எம்.ஏ.,(ATMA)  -  150க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் * ஐ.ஐ.எப்.டி.,(IIFT)  -  டில்லி மற்றும் கொல்கத்தாவிலுள்ள ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனம் * என்.எம்.ஏ.டி.,(NMAT)  -  என்.எம்.ஐ.எம்.எஸ்., மும்பை * எஸ்.என்.ஏ.பி.,(SNAP)  -  சிம்பயோசிஸ் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகம் * எம்.ஐ.சி.ஏ.டி.,(MICAT)  -  எம்.ஐ.சி.ஏ., * ஐ.பி.எஸ்.ஏ.டி.,(IBSAT)  -  ஐ.சி.எப்.ஏ.ஐ., வணிகப் பள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !