ஆஸ்திரேலியாவில் மருத்துவப் படிப்பு
வெளிநாட்டில் மருத்துவ படிப்பினை தொடர விரும்பும் மாணவர்கள், ‘செலவைப் பற்றி கவலை இல்லை’ என்றால் அவர்களுக்கு, ஆஸ்திரேலியா ஒரு சிறப்பான தேர்வு தான்! ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில், சர்வதேச மருத்துவ பட்டதாரிகளின் பதிவு விகிதம் அதிகரித்துள்ளதாக, மருத்துவ நிபுணர்களால் சேகரிக்கப்பட்ட ‘சேனப்ஷாட்’ தகவல் கூறுகிறது. கடந்த 2008ம் ஆண்டில், மருத்துவ படிப்பிற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நூறிலிருந்து, 2013ல் 600ஆக உயர்ந்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ஆசிய நாடுகளைவிட, ஆஸ்திரேலிய மருத்துவப் பள்ளிகளில் சேர்வது சற்று கடினம் தான் என்றாலும், தகுதியுள்ள மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. பிரபலமான மருத்துவ படிப்புகள்: எம்.பி.பி.எஸ்., எம்.பி.சிஎச்.பி., ஸ்போர்ட்ஸ் மெடிசின் மற்றும் எம்.டி., கால அளவு: இளநிலை மருத்துவ படிப்புக்கு 5 ஆண்டுகள். சராசரி கல்விக் கட்டணம்: 40,000 - 70,000 ஆஸ்திரேலிய டாலர்கள். தகுதிகள்: இளநிலை மருத்துவ படிப்புக்கு, பள்ளி மேல்நிலை வகுப்பில் வேதியியல் மற்றும் உயிரியல் முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும். ஆங்கில மொழிப்புலமையை பரிசோதிக்கும் IELTS/TOEFL தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆஸ்திரேலியாவில் மருத்துவம் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்கள், ISAT மற்றும் MCAT போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம். சிறந்த கல்வி நிறுவனங்கள்:1. மெல்போர்ன் பல்கலைக்கழகம், 2. சிட்னி பல்கலைக்கழகம்,3. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்4. மொனாஷ் பல்கலைக்கழகம்,5. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்6. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம்7. அடிலெய்டு பல்கலைக்கழகம்8. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்9. நியுகெஸ்டில் பல்கலைக்கழகம்10. வொலாலாங் பல்கலைக்கழகம்