எதற்காக எழுதவேண்டும் ‘டோபல்’?
அயல்நாட்டிற்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கான முதல்படி தான் ஆங்கில மொழி தேர்வுகளை எழுதுவது! ஆங்கில மொழி பேசும் நாடுகளில் நீங்கள் படிக்கவோ அல்லது வேலை பெறவோ செல்லும் பட்சத்தில் உங்களது ஆங்கில மொழிப் புலமை பரிசோதிக்கப்படும். குறிப்பாக, டோபல் (Test of English as a Foreign Language) தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருப்பது மிகவும் அவசியமானது! யாருக்கான தேர்வு?உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் ஆங்கில மொழி திறமையை நிரூபிக்க டோபல் தேர்வினைத் தேர்வு செய்கின்றனர். வெளிநாட்டில் உயர்கல்வி நிறுவனத்தில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள், ஆங்கில மொழி கற்றல் சேர்க்கைக்குத் திட்டமிட்டுள்ளவர்கள், உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக விசா விண்ணப்பிக்கும் மாணவர்கள்/ பணியாளர்கள் போன்றவர்கள் டோபல் தேர்வினை எழுதுகின்றனர். அங்கீகாரம்130க்கும் மேற்பட்ட நாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்கள் இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. ஆஸ்திரேலியா செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்துத்தான், அவர்களுக்கு தேவையான மொழித் திறன் இருக்கிறதா என்று அந்நாட்டுஅரசால் ஆராயப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்நாட்டு வணிக விசா போன்றவற்றுக்கும் டோபல் தேர்வின் மதிப்பெண்கள் மிகமுக்கியமாகக் கருதப்படுகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தின் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கும், விசா வழங்குதல் உட்பட பல்வேறு காரணங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. தேர்வு முறை மற்றும் மதிப்பீடு: டோபல் தேர்வின் மூலமாக ஒருவரது வாசித்தல், புரிந்துகொள்ளுதல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. நாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, இத்தேர்வின் குறைந்தபட்ச மதிப்பெண் அளவுகோல் மாறுபடுகிறது. டோபல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். தேர்வின் கால அளவு: 4 மணி 30 நிமிடங்கள். விண்ணப்பிக்கும் முறை: டோபல் தேர்வானது ஒரு வருடத்திற்கு 50 முறை நடத்தப்படும். தேர்வு அறிவித்த 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.ets.org